மதுரை அழகர்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்கு மூலவர் அழகர் (சுந்தரராஜப் பெருமாள்) வீற்றிருக்கிறார். உற்சவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர்கோயிலில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவதும், அங்கு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோச்சனம் தருவதும் பிரசித்திபெற்ற திருவிழாக்கள்.
மதுரை அழகர் கோயிலைப் போலவே ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்திருப்பதும், அங்கும் பெருமாள் சித்திரை மாதத்தில் வைகையாற்றுக்கு எழுந்தருள்வதும் நடைபெறுவது அற்புதமானது.
பரமக்குடியில் வைகையாற்றின் கரையில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலும், அதற்கு அருகில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. மதுரையைப் போலவே பரமக்குடியிலும் சித்திரை மாதம் மீனாட்சி, சுந்தரேஸ்வருக்கு திருக்கல்யாண திருவிழா நடைபெறும். 10 நாள் திருவிழா நடைபெற்றதும், அதன் மறுநாள் சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று கள்ளழகர் பெருமான் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வார். சித்ரா பெளர்ணமி நிலா வெளிச்சத்திலும், நூற்றுக்கணக்கான தீவட்டிகள் ஒளியிலும், வாண வேடிக்கை முழங்க வையாற்றில் கள்ளழகர் இறங்குவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என முழங்குவார்கள்.
பின்னர் மேலச்சத்திரம், ஓட்டப்பாலம், காட்டு பரமக்குடி, மஞ்சள்பட்டினம் சென்று அங்குள்ள கோயில்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு, ஆற்றுப் பாலம், நகர்ப்பகுதி வழியாக வந்து அனுமார் கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் என்னும் காக்காத்தோப்பை சென்றடைந்து அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் காட்சியளிப்பார்.
இதனிடையே பரமக்குடி ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து சுமார் 40 அடி உயரமுள்ள ஆயிரம் பொன் சப்பரத்தை வைகையாற்று மணலில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்து வந்து காக்காத்தோப்பை அடைவார்கள். அங்குவைத்து சப்பரத்தினுள் கள்ளழகரை கொடுத்து வாங்குவார்கள். இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க பரமக்குடி மட்டுமல்லாது சுற்றுப்புற கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்தினருடன் திரண்டு வருவார்கள். மதுரையில் இல்லாத சிறப்பாக பரமக்குடியில் அமைந்திருப்பது இந்த ஆயிரம்பொன் சப்பரம் ஆகும்.
சித்திரைத் திருவிழா தவிர பரமக்குடி சுந்தரராஜப் பெருமாளுக்கு 10 நாள் ஆடி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது சிறப்பாகும். முதல் எட்டு நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வருவார். 9-ம் நாளில் தேரோட்டமும், 10-ம் நாளில் தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கம்.
நிகழ்ச்சிகள்:
24.7.2023 - கொடியேற்றம்
1.8.2023 - ரத உற்சவம்.
2.8.2023 - தீர்த்தவாரி.