திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் கோலாகல தொடக்கம்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தோரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடக்க உள்ள வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் 10ம் நாள் திருவிழாவான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி காந்தன், திருச்செங்கோடு டிஎஸ்பி-யான இமயவரம்பன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் 4-வது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருத்தேர் 3 நாட்கள் வடம் பிடித்து இழுப்பது வழக்கம். முதல் நாளான இன்று திருத்தேர் நிலை பெயர்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து நாளை 2-ம் நாள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும். நாளை மறுநாள் திருத்தேர் நிலை சேர்க்கப்படும். அதன்பின் 27ம் தேதி 14-ம் நாள் திருவிழாவில் பரிவார தெய்வங்களுடன் அர்த்தநாரீஸ்வரர் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE