ஆண்டாள் அவதாரத் திருநாள் - 4: கோதை மாலை மாற்றினாள்

By மு.இசக்கியப்பன்

ஆண்டாள் நாச்சியாரின் தீராத பக்தியால் மனமுருகிய ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமான், அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். அப்படியே அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கு மரியாதைகளோடு பெரியாழ்வார் அழைத்துச் சென்றார். பெரியபெருமாள் சன்னதியில் அனைவரும் பார்த்திருக்க ஆண்டாள் மறைந்தாள். ஆழ்வார்கள், ஆசார்யர்களின் வைபவங்களைக் கூறும் குருபரம்பரையில் இந்த காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கமன்னாருடன் காட்சி தரும் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் திருமணக் கோலத்தோடு, அருகே மாப்பிள்ளை தோழராக கருடபகவான் இருக்க பங்குனி உத்திர நாளில் காட்சி தந்தனர். அதே திருக்கோலத்தில் இன்றைக்கும் நாம் சேவிக்கலாம். இக்கோயிலின் மகா மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. உட்பிரகாரத்தில் மிக அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் மூவரும் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகின்றனர்.

இக்கோயிலுக்கு அருகிலேயே வடபுறம் மற்றொரு தனிக்கோயிலில் ஸ்ரீ வடபத்ரசாயி கோயில் கொண்டுள்ளார். இதுவே காலத்தால் முந்தைய கோயில். இங்கு சயனத் திருக்கோலத்தில் சுதை ரூபமாக பெருமாள் காட்சி தருகிறார். இவரது சன்னதியிலேயே 193 அடி உயர, 11 அடுக்கு ராஜகோபுரம் அமைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

இவ்விரு கோயில்களுக்கு நடுவே பெரியாழ்வார் நந்தவனம் அமைந்துள்ளது. ஆண்டாள் அவதரித்ததைக் காட்டும் சிற்பங்கள் இங்கு உள்ளன.

ஆண்டாள் நாச்சியாருக்கு தினமும் மாலையில் சார்த்தப்படும் மாலைகள், மறுநாள் காலையில் விஸ்வரூப தரிசனத்தின்போது ஸ்ரீவடபத்ரசாயிக்கு சார்த்தப்படும். ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த மாலைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதும், மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாளுக்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் போதும், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமானுக்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் போதும் அணிவிக்கப்படுகின்றன. இவை ஆண்டாள் நாச்சியாரின் உயர்வைக் காட்டுகின்றன.

ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த மாலைகள்...

ஆண்டாள் நாச்சியார் தமது இடது கையில் கிளி வைத்திருப்பாள். மந்தாரை இலைகள், காக்காய்ப்பொன், மாதுளை முத்துக்கள் போன்றவற்றைக் கொண்டு இயற்கையான பொருட்களால் தினமும் புதிதாக சமர்ப்பிக்கப்படுகிறது. இதனை வடிவமைப்பதற்காகவே ஒரு குடும்பத்தார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளனர். முதல்நாள் சமர்ப்பிக்கப்படும் கிளி பொம்மையானது, மறுநாள் வரை ஆண்டாள் கையில் இருக்கும். பின்னர் அன்றைக்கு வரும் முக்கிய விருந்தினருக்கு அதனை பிரசாதமாக கொடுப்பார்கள்.

தினமும் புதிதாக தயாராகும் ஆண்டாள் கிளி

பெருமாளுக்குரிய மாலைகளை முதலில் தாம் சூடி ஆண்டாள் நாச்சியார் அழகுபார்த்த கிணறு, முகம்பார்த்த தட்டொளி எனப்படும் வெண்கலத் தட்டு, பாவை நோன்பின் போது ஆண்டாள் நாச்சியார் நீராடிய திருமுக்குளம் ஆகியவற்றை இப்போதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தரிசிக்கலாம். அதுபோல் இங்கு பெரியாழ்வார் அவதரித்த மற்றும் ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த திருமாளிகையை தரிசிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை எனப்படும் குன்றின் மீது திருவேங்கடவன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதுபோல் செண்பகவனம் எனப்படும் மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டழகிய சிங்கர் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட அணில்கள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் திருஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று இவர்கள் மூன்று பெருமாள்களும், ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள், ஸ்ரீ ரங்கமன்னார் ஆகிய ஐந்து பேரும் கருட வாகனங்களில் பவனி வருவர். அப்போது ஆண்டாள் நாச்சியார் அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் பரங்கிநாற்காலி வாகனத்திலும் பவனி வருவர்.

தமிழகத்தின் மிகப்பெரிய தேர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் ஒன்று. இத்தேரில் ஆண்டாள் நாச்சியார் தான் அவதரித்த ஆடிப்பூரம் நாளில் பெருமாளுடன் பவனி வருவார்.

---

நடப்பாண்டில் ஆடிப்பூர தேரோட்டம்

22.7.2023.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE