திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருத்தலம் திருமுருகன்பூண்டி. இங்கு ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை சமேத திருமுருகநாதேஸ்வர் கோயில் கொண்டுள்ளார். பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் தவமிருந்த வழிபட்ட தலம் என்பதால், இப்பெயர் பெற்றது. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. சுவாமியும், அம்பாளும் மேற்கு நோக்கி இங்கு வீற்றிருக்கின்றனர்.
இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட திருவிளையாடல் நடைபெற்ற தலம் இது.
சேர நாட்டில் கொடுங்கோளூரை தலைநகராகக் கொண்டு மன்னன் சேரமான் பெருமாள் நாயனார் ஆண்டு வந்தார். இவரது அரண்மனைக்கு சுந்தரர் பெருமான் ஒருமுறை சென்றிருந்தார். அங்கு தங்கியிருக்கும் போதே திருவாரூர் தியாகேச பெருமானின் நினைவு வர, அந்த ஆவல் மேலீட்டினால் “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை” என்று தொடங்கும் ஏழாம் திருமுறையின் 59-வது திருப்பதிகத்தில் அடங்கிய 10 பதிகங்களை சுந்தரர் பாடினார். இவை ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் “ஆரூரானை மறக்கலும் ஆமே” - திருவாரூர் இறைவனை என்னால் மறக்க முடியுமா? என்று கூறியே 10 பாடல்களையும் நிறைவு செய்தார்.
பின்னர், திருவாருர் இறைவனை தரிசிக்கும் பேராசையால், கொடுங்கோளூரில் இருந்து சோழ நாட்டுக்கு பயணத்தை தொடங்கினார். அப்போது, சேரமான் பெருமாள் நாயனார் ஏராளமான செல்வங்களை தமது நண்பராகிய சுந்தரருக்கு கொடுத்தனுப்பினார். மன்னரின் பணியாட்கள் அந்த செல்வங்களைச் சுமந்துகொண்டு சோழ நாட்டை நோக்கி முன் செல்ல, சுந்தரர் பெருமான் பின்னே நடந்து வந்தார்.
இக்குழுவினர் கொங்கு நாட்டின் வழியே வந்தனர். அப்போது ஓரிடத்தில் தமது திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். சுந்தரரின் குழுவினரை திடீரென வேடுவர் கூட்டம் ஒன்று சூழ்ந்து கொண்டது. அவர்களிடம் இருந்த செல்வங்களை எல்லாம் பறித்துக் கொண்டு வேடுவர் கூட்டம் ஓடி மறைந்தது.
செல்வத்தை பறிகொடுத்த பணியாட்கள் பின்னால் வந்து கொண்டிருந்த சுந்தரரிடம் வந்து நடந்தவற்றைக் கூறினர். சுந்தரரும் மனம் வாட்டமடைந்தார்.
அப்போது அங்கு தோன்றிய விநாயகப் பெருமான், “உம்மை கொள்ளை கொள்வதற்காகவே திருமுருகன்பூண்டி திருத்தலத்து இறைவனாகிய திருமுருகநாதேஸ்வர், தமது பூதகணங்களை எல்லாம் வேடுவர் உருவத்தில் அனுப்பி, உமது செல்வங்களைக் கொள்ளை கொண்டார்” என்று கூறி, சுந்தரருக்கு திருமுருகன்பூண்டியில் இறைவன் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தார். அவருக்கு கூப்பிடு விநாயகர் என்று பெயர், திருமுருகன்பூண்டியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் அவிநாசி சாலையில் ஒரு பாறை மீது அமைந்துள்ள கோயிலில் கூப்பிடு விநாயகரை இப்போதும் தரிசிக்கலாம்.
தம்மை இவ்வாறு இறைவன் சோதிக்க என்ன காரணமோ? என்று மனம் வருந்திய சுந்தரர் பெருமான் உடனே திருமுருகன்பூண்டிக்கு சென்றார். சினமும், ஆற்றாமையும் கொப்பளிக்க “வேடுவர் கூட்டங்கள் நிறைந்த இந்த இடத்தில் நீர் எதற்காக குடியிருக்கிறீர்?” என்று கேட்கும் விதமாக 10 பாடல்களைப் பாடினார். அவற்றில் ஒன்று:
“வில்லைக்காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளுமிடம்
முல்லைத்தாது மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கிருந்தீர் - எம்பிரானிரே”
இவ்வாறு இன்தமிழின் சுவை மிகுந்த சுந்தரரின் பாடல்களைக் கேட்ட இறைவன் மனம் மகிழ்ந்து திருமுருகன்பூண்டி கோயிலின் முன் அனைத்து செல்வங்களையும் குவித்து வைத்தார். சுந்தரரும் மனம் மகிழ்ந்தார்.
இக்கோயிலில் வேடுவர் வேடத்தில் சிவபெருமானும், வாடிய முகத்துடனும், மலர்ந்த முகத்துடனுமாக சுந்தரரின் இரு சிலைகளும் இருப்பதைக் காணலாம்.
இத்திருவிளையாடல் நிகழ்வை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடுகிறார்:
“திருமுருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பது அல்லால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்” - என்று பாடியுள்ளார்.
இதுதவிர க்ஷேத்திரப் பாடல்களில் அப்பரும் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர்.
முருகப்பெருமான் வழிபட்ட முருகநாதர் முருகன் சன்னதியில் தனியாக வீற்றிருக்கிறார். அதுபோல் முருகப்பெருமான் தோற்றுவித்த சண்முகதீர்த்தமும் இக்கோயிலில் தென்பகுதியில் உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.