மதுரை: மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவ்வாண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்தத் திருவிழா செப்டம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு, சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9:55 மணியளவில் சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பிரியா விடை சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் அருள்பாலித்தனர். செப்.4-ம் தேதி வரை தினமும் இரவு சந்திரசேகரர் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து செப். 5-ம் தேதி காலை கருங்குருவிக்கு உபதேசம் அருளிய திருவிளையாடலும் செப். 6-ல் நாரைக்கு முக்திகொடுத்த லீலையும் நடைபெறுகிறது.
» ஆவடி அருகே திருமுல்லைவாயில் காலணி கடையில் திடீர் தீ விபத்து
» அண்ணாமலை வெளிநாடு பயணம்: கட்சியை நிர்வகிக்க ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு!
செப்.7-ல் மாணிக்கம் விற்ற லீலையும், செப். 8-ல் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலையும், செப். 9-ல் உலவாக்கோட்டை அருளிய லீலையும் நடைபெறுகிறது. செப்.10-ல் காலை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலையும், செப்.11 ல் வளையல் விற்ற லீலையும் நடக்கிறது. அன்றைய தினம் மாலையில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகமும், செப்.12-ம் தேதி காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது.
மாலையில் நரியை பரியாக்கிய லீலை நடக்கிறது. செப்.13 காலையில் சுவாமி பிட்டுத் தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. செப்.14 மாலையில் விறகு விற்ற லீலையும், செப்.15 காலையில் சட்ட தேரும், மாலையில் சப்தாபர்ண சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. செப்.16- ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் கோயில் பணியாளர்கள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.