சுந்தரருக்கு சிவபெருமான் பொன் கொடுத்த திருத்தலம்!

By மு.இசக்கியப்பன்

எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே

இலவங்கந் தக்கோலம் இஞ்சி

செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்

திளைத்தெற்று சிற்றாறு அதன்கீழ்க்கரை மேல்

முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்

குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா

வெறிக்குங் கலைமா வெஞ்சமாக்கூடல்

விகிர்தா அடியேனையும் வேண்டுதியே!

- ஏழாம் திருமுறை, சுந்தரர் பெருமான்.

கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சீத்தப்பட்டி ஆறுரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருவெஞ்சமாக்கூடல்.

வேட்டுவ மன்னன் வெஞ்சமன் என்பவர் இப்பகுதியை ஆண்டதாலும், குழகனாறும், அதன் கிளை நதியான சிற்றாறும் கூடும் இடத்தில் இத்தலம் இருப்பதாலும், இத்தலத்துக்கு வெஞ்சமாக்கூடல் எனப்பெயர் வந்தது.

மூலவர் சுயம்புத் திருமேனியாக சுமார் ஐந்து அடி உயரத்தில் வீற்றிருக்கிறார். கல்யாண விகிர்தேஷ்வரர் என்றும், விகிர்த நாதேஸ்வரர் என்றும் சுவாமி அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கு மதுரபாஷிணி என்றும், பண்ணேர்மொழியம்மை, விகிர்த நாயகி என்றும் திருப்பெயர்கள். கல்வெட்டுகள் சுவாமியை வெஞ்சமாக்கூடல் விகிர்தர் என்றும், அம்பாளை பனிமொழியாள் என்றும் அழைக்கின்றன.

இந்திரன் சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்து நற்கதிஅடைந்ததாக தல வரலாறு கூறுகிறது. அதுபோல் அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. சேக்கிழாரும் இப்பெருமானைப் பாடியுள்ளார். சுந்தரருக்கு சிவபெருமான் பொன் கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்துக்கு வந்த சுந்தரருக்கு முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான், அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம் தனது இரு மகன்களைக் கொடுத்து, அதற்குப் பதில் பொற்காசுகளைப் பெற்று அவற்றை சுந்தரருக்கு கொடுத்தாராம். முதியவராக வந்தவர் சிவபெருமானாகவும், மூதாட்டியாக வந்தவர் அம்பாளுமாக காட்சி தந்தனர்.

உடனே சுந்தரர் பெருமான் சிற்றாறின் கிழக்கு கரையில் வீற்றிருக்கும் விகிர்த நாதேஸ்வரர் பெருமானை மேலேயுள்ள பாடல் தொடங்கி 10 பாடல்களால் பாடினார். அவை ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. திருநாவுக்கரசர் அருளிச்செய்த ஆறாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள க்ஷேத்திரக்கோவையில் வெஞ்சமாக்கூடலையும் பாடியிருக்கிறார்.

இக்கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ஆறு முகங்களுடன், பன்னிரு திருக்கைகளுடன் மயில்மீது அமர்ந்துள்ளார். இந்த சன்னதி அருணகிரிநாதரால் பாடல்பெற்றது.

கொங்கு நாட்டுக் கோயில்களில் ராஜகோபுரத்துக்கு வெளியே ஒற்றைக்கல்லால் ஆன சுமார் 20 அடி உயரத்துக்கு குறையாத தீபஸ்தம்பம் இருப்பது வழக்கம். இதன் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். இக்கோயிலிலும் அத்தகைய ஸ்தம்பம் உயர்ந்து நிற்கிறது. ராஜகோபுரத்தை விட தாழ்வாகவே கோயில் அமைந்துள்ளது.

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஏழு சிவத்தலங்களின் மூலவர் விக்ரகங்கள் இக்கோயிலில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. நாயன்மார்களின் விக்ரகத்துக்கு கீழே அவரவர் பிறந்த நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.

கரூர் - திருவெஞ்சமாக்கூடல் கல்யாண விகிர்தேஷ்வரர் ஆலயம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE