“கோவானூர் பொட்டலிலே குண்டுமணி அம்மன் சந்நிதியில் சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப் பெண்ணே” என்று சித்தர் பாடல் ஒன்று உண்டு. இப்பாடலை அகத்திய முனிவர் பாடியதாகக் கூறுவதுண்டு.
சிவகங்கை மாவட்டம், கோவானூர் ஊராட்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமான் பக்தர்கள், சித்த மருத்துவர்கள் மற்றும் சித்த மருந்து சாப்பிடுபவர்கள் ஆகியோர் வழிபட வேண்டிய தலமாக போற்றப்படுகிறது. சித்தர்கள் சாகாவரம் பெற்ற ஊர் என்றும், முருகப்பெருமான் அவதரித்த ஊர் என்றும் இத்தலம் அறியப்படுகிறது.
சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ள கோவானூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளுக்கும் முந்தைய தலமாக கூறப்படுகிறது. மூலவரின் தோற்றம் திருச்செந்தூர் முருகப்பெருமானைப் போலவே இருப்பது தனிச்சிறப்பு.
தல வரலாறு
அகத்திய முனிவர் பல்வேறு தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் புனிதப் பணியை மேற்கொண்டிருந்தார். ஒரு சமயம், திருப்புவனம் பூவனநாதரை தரிசித்துவிட்டு திரும்பும்போது கானப்பேர் காளீசரை தரிசிக்க எண்ணினார். அப்போது மாலை நேரமாகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். காலை எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்ய எண்ணிய அகத்திய முனிவர், அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்று பார்த்தார். பிறகு அங்கேயே அமர்ந்து சிவபெருமானை தியானித்து, ஓர் ஊற்றை தோற்றுவித்தார். அதில் இருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில் கமண்டலத்தில் இருந்த நீர் அருகில் இருந்த செடி மீது பட்டு பூநீராகப் பெருகி ஓடியது.
தான் அமர்ந்து தியானம் செய்த இடத்தின் மகிமையை உணர்ந்த அகத்திய முனிவர், அந்த இடத்தில் தனது இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய எண்ணினார். அதன்படி, குரு முதல்வனை தனியாக பிரதிஷ்டை செய்யாமல், வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தார். பின்னர் கோயில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பாண்டிய மன்னனை சந்தித்து, இதுதொடர்பாகப் பேசி மூல மூர்த்தி பிரதிஷ்டை, கோயில் கட்டும் நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொண்டார். மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கிபி 13-ம் நூற்றாண்டு) காலத்து கோயிலாக இக்கோயில் போற்றப்படுகிறது.
பூநீர் சிறப்பு
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த ஊற்று நீர், ஒரு செடியின் மீது பட்டு பூநீர் பெருகியது. இதுவே, சித்த வைத்தியத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் ‘பூநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதை சேகரிப்பதற்காக, சித்தர்களும், சித்த வைத்தியர்களும் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திர தினங்களில் அதிகாலை 6 மணிக்குள் இத்தலம் வந்திருந்து முருகப்பெருமானை தரிசித்துவிட்டு பூநீர் சேகரித்துச் செல்வது வழக்கம்.
சாத்தப்ப ஞானி
கோவானூர் தலத்தில் சாத்தப்பன் என்ற சிறுவனுக்கு இறையுணர்வு அதிகமாக இருந்தது. சிறுவயதில் இவ்வளவு பக்தியுடன் சாத்தப்பன் இருப்பதைக் கண்டு கோவானூர் மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். இறை தரிசனம் மட்டுமின்றி, முனிவர்கள், சித்தர்கள் போன்றோருக்கும் தன்னால் ஆன உதவிகளை அவ்வப்போது செய்து வருவான் சாத்தப்பன்.
ஒருநாள், சாத்தப்பன் காட்டில் திரியும்போது அங்கு தியானத்தில் இருக்கும் அகத்தியர், போகர் போன்ற முனிவர்களுக்கு உதவ எண்ணினான். அவர்கள் தியானத்தில் இருந்து கண் விழித்ததும் அவர்கள் தேவை அறிந்து அவர்களுக்கு உதவினான். முனிவர்களுக்கு பழங்கள் பறித்துக் கொடுத்து, அவர்கள் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்து உதவினான்.
சாத்தப்பனின் சேவையில் மகிழ்ந்த முனிவர்கள், அவனது இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்தனர். சில வழிபாட்டு முறைகளையும் கூறிச் சென்றனர். அன்று முதல் முருகப்பெருமான் கோயிலே கதி என்று கிடந்தான் சாத்தப்பன். பல தலங்களுக்குச் சென்று இறை தரிசனம் கண்டான். காலப்போக்கில் சாத்தப்பன் ‘சாத்தப்ப ஞானி’ என்று போற்றப்பட்டார். சிவகங்கை சீமை தோன்றக் காரணமாக இருந்தவர் ‘சாத்தப்ப ஞானி’ ஆவார். இவர், சிவகங்கை மன்னர்களின் ராஜ குருவாகவும் இருந்தார்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
கி.பி 13-ம் நூற்றாண்டில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கற்றளியாக உருவாக்கப்பட்டது. கோயிலில் நித்ய பூஜை, கைங்கர்யப் பணிகள் நடைபெறும் பொருட்டு, நென்மேனி, கீழ்மேனி, வீரவலசை, கிழக்குளம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்கள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டன. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் கோயிலில் அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா போன்றவை நடைபெற்றன.
கோயிலுக்கு நான்கு புறங்களிலும் உயர்ந்த மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சாலக்கோபுர வாசல் தாண்டி உள்ளே சென்றால் பெரிய பிரகாரம் காணப்படுகிறது. கோயில் எதிரே பலிபீடம், மயில் வாகன மண்டபம் அமைந்துள்ளன. வாகன மண்டபத்தில் வேலும் மயிலும் இணைந்து காணப்படுகிறது. இந்த மண்டபத்தில் உள்ள மயில் வித்தியாசமாக பாம்பை வாயில் கவ்விப் பிடித்திருக்கும்.
பிரதான கோயிலானது மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற நேர்த்தியான கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். மேற்குச் சுற்றில் கன்னிமூலை கணபதி, சித்தர் சந்நிதிகள் உள்ளன. வடக்குச் சுற்றில் தல விருட்சமான வில்வ மரமும், தீர்த்தக் கிணறும் உள்ளன. கோபுர வாசலின் வடபுறத்தில் இடும்பன் சந்நிதி அமைந்துள்ளது.
முருகப்பெருமானுக்கு 9 படைத் தளபதிகள் (நவவீரர்கள்) உண்டு. நவரத்தினங்கள் பெண்களுக்குச் சமமாக கூறப்படுகின்றன. இப்பெண்கள் ஆளுக்கு ஒருவர் வீதம் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இக்குழந்தைகள் நவவீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மாணிக்கவல்லியின் மகன் வீரபாகுத்தேவர். முத்துவல்லியின் மகன் வீரகேசரி. புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர். கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ்வரர். வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைர வல்லியின் மகன் வீரராக்கதர். மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர். நீலவல்லியின் மகன் வீரதீரர். கோவானூர் கோயிலில் நவரத்தின தாய்மார்கள் மற்றும் நவவீரர்களின் உருவங்கள் காணப்படுவது தனிச்சிறப்பு.
சித்ரா பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு எதிரில் உள்ள மைதானத்தில் தங்கியிருப்பது வழக்கம். நள்ளிரவு தாண்டியதும் விளக்கு வெளிச்சத்தில், பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறப்பைத் தடுக்கும் ஆற்றல் மிக்க மூலிகைச் செடியைத் தேடுகின்றனர். அந்த தினத்தில் மூலிகைச் செடி பூமியில் இருந்து கிளம்புவதாக ஐதீகம். சித்தர்கள் அருவமாக வந்து அந்த மூலிகையைப் பறித்து சாறாக்கி அருந்துவதாக நம்பிக்கை. அந்த இடத்தில் உள்ள மண்ணை எடுத்து அவரவர் நிலத்தில் தூவினால் பல நன்மைகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவானூர் முருகப் பெருமான் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூரில் தருவது போல் இத்தலத்திலும் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
குண்டுமணி அம்மன் சந்நிதி
கோவானூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவல்லி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாக உள்ளனர். கோவானூர் முருகன் கோயிலுக்கு நேர் கிழக்கில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குண்டுமணி அம்மன் கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமி, மாசி மகம், பங்குனி உத்திர தினங்களில் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவானூர் கோயில் வந்திருந்து முருகப் பெருமானை தரிசிப்பதாகக் கூறப்படுகிறது. பின்பு குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கு கிடைக்கும் பூநீரைப் பருகிச் செல்வதாகவும் ஒரு நம்பிக்கை.
திருவிழாக்கள்
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடிப் பதினெட்டு, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி மாத பூஜை, தைப் பொங்கல், தைப் பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரத் திருவிழா உள்ளிட்டவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, ஆடி வெள்ளிகள், பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி, பூச நட்சத்திர தினம், கார்த்திகை நட்சத்திர தினம், ஆகிய நாட்களிலும் இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
தீராத நோய் குணமடைய, நாக தோஷம் நீங்க இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழக்கம்போல் மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன. தங்கள் குறைகள் தீர்ந்ததும், பக்தர்கள் இத்தலத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை, இடும்பன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபடுவது வழக்கம்.
திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு கிட்ட, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் விலக இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயில் அமைவிடம்: சிவகங்கை - மதுரை சாலையில் 7 கி.மீ தூரத்தில் பில்லூர் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு சிவகங்கையிலிருந்து திருப்புவனம் செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். பில்லூரிலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. நடந்து சென்றால் கோவானூர் முருகன் கோயிலை அடையலாம்.