மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் அருளும் காவிரிக்கரை திருத்தலம்!

By மு.இசக்கியப்பன்

காவிரி நதி கிழக்கு நோக்கி பாய்ந்து வரும் வழியில் மேட்டூர் அணையில் இருந்து நதியின் பயணம் தெற்கு நோக்கி திரும்புகிறது. சில இடங்களில் கிழக்கு நோக்கி திரும்பினாலும், திருச்செங்கோடு அருகே ஜேடர்பாளையத்தில் தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நகரம் திருப்பாண்டிக் கொடுமுடி. தற்போதைய பெயர் கொடுமுடி. கொடுமுடியில் இருந்து காவிரியின் போக்கு கிழக்கு நோக்கி திரும்பி விடுகிறது.

திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்

ஈரோடு மாவட்டத்தில், கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் கொடுமுடி அமைந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் மார்க்கமாக செல்ல முடியும். காவிரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலில் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.

சிவபெருமானுக்கு மகுடேஸ்வரர் என்பது பெயர். ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற்றது. மேருமலையை ஆதிசேஷன் சுற்றிக் கொள்ள, அந்த மலையை வாயுபகவான் அசைத்து விட வேண்டும் என்பதே போட்டி. இருவரும் சமபலம் காட்டினர். வாயுவின் வேகமும், ஆதிசேஷனின் பலமும் சேர்ந்து மேருமலையை ஏழு துண்டுகளாக சிதறச் செய்தன. இந்த ஏழு துண்டுகளில் ஒன்றான வைரத்துண்டு பறந்து வந்து கொடுமுடியில் விழுந்தது. அதுவே மகுடேஸ்வரர் திருமேனி என்பது தல வரலாறு. உண்மையில் மிகப்பெரிய மலைச்சிகரம் ஒன்று பூமிக்குள் இருப்பதாகவும், அதன் உச்சிப்பகுதியே இப்போது நாம் தரிசிக்கும் மகுடேஸ்வரர் என்றும் ஒரு கருத்து உண்டு.

திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில் உட்புறம்...

சிவபெருமானை தரிசிக்க திருஞான சம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகவே அவருக்கு தென்பட்டது. திகைத்துப் போன அவர் காலால் மிதித்து எப்படி நடந்து செல்வது என்று எண்ணி, முழங்காலால் நடந்து சென்று கோயிலில் வழிபட்டாராம்.

அகத்தியரின் விரல் தடம்

மைசூரு அருகேயுள்ள குடகு மலையில் இருந்து காவிரியைத் தோன்றச் செய்த அகத்திய முனிவர், காவிரி செல்லும் பாதை வழியாகவே நடந்து வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் லிங்கங்களை ஸ்தாபித்தார். அதுபோல், கொடுமுடிக்கு வந்த அகத்தியர் அங்கு கோயில் கொண்டுள்ள சுவாமி மகுடேஸ்வரருக்கு அலங்காரம் செய்து வழிபட்டார். இதனால் சுவாமியின் திருமேனியில் அகத்தியரின் கைவிரல் தடம் பதிந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

அதிசய வன்னி மரம்

கொடுமுடி கோயில் வளாகத்தில் பன்னெடுங்காலமாக இருக்கும் வன்னி மரத்தைக் காணலாம். இதில் பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காது. இதன் இலைகளை தண்ணீர்க் குடத்தில் போட்டு வைத்தால், அந்த தண்ணீர் கெடாமல் இருக்குக். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் செல்வபவர்களும், கொங்கு நாட்டில் பல்வேறு கோயில்களுக்கு கொடுமுடி காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்பவர்களும், குடத்தில் இந்த வன்னி மரத்தின் இலைகளையும் போட்டு எடுத்துச் செல்வார்கள். இதனால் தீர்த்தம் கெடாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.

கொடுமுடி காவிரிக்கரை

பரிகார பூஜைகள்

நாகதோஷ நிவர்த்திக்காகவும், பித்ருக்கள் கடன் நிறைவேற்றவும் கொடுமுடிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதற்காக காவிரிக்கரையில் ஏராளமான புரோகிதர்கள் இருக்கிறார்கள்.

இசையுலகில் கொடிகட்டிப் பறந்த கே.பி.சுந்தராம்பாள் பிறந்த ஊர் கொடுமுடி என்பது கூடுதல் தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE