நாகர்கோவில் கோயில்கொடை திருவிழா: உலர் பழங்களால் மெகா மாலை!

By பி.டி.ரவிச்சந்திரன்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நாகர்கோவில் அருகே நடைபெறும் கோயில் கொடை விழாவிற்கு உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மெகா மாலை அனைவரையும் கவர்ந்தது.

நாகர்கோவில் அருகே கீழவண்ணன்விளை கிராமத்தில் அமைந்துள்ள வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக உலர் பழங்களை கொண்டு மாலை தயார் செய்வதற்கான பணியினை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள மாலை கட்டும் கடைக்கு நாகர்கோவில் பகுதி பக்தர்கள் வழங்கினர். இதையடுத்து மாலை செய்யும் பணிகள் துவங்கின. கடந்த 20 நாட்களாக மாலை கட்டும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு உலர் பழங்களையும் நேர்த்தியாக கோத்து பிரம்மாண்ட மாலைகளை வடிவமைத்தனர். மாலையில் அதிக அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு எட்டு அடி மாலை இரண்டும், நான்கு அடி மாலை ஒன்றும் செய்து முடித்தனர். இதையடுத்து இன்று துவங்கும் திருவிழாவிற்கு இந்த மாலைகள் நாகர்கோவில் அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மாலை கட்டும் பணியாளர்கள் உருவாக்கிய 75 கிலோ எடை கொண்ட மூன்று மாலைகள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

மாலை கட்டும் கடை நடத்திவரும் சகோதரர்களான முருகன், முத்துக்குமார் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"வழக்கமாக பூக்களை கொண்டு பிரம்மாண்ட மாலைகள் செய்து கொடுத்துள்ளோம். தற்போது தான் உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு பிரம்மாண்ட மாலை தயாரித்துள்ளோம். இந்த மூன்று மாலைகளும் ரூ.4 லட்சம் மதிப்பு கொண்டவை.

இந்த நான்கு மாலைகளையும் செய்ய 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். 20 நாட்கள் பணி நடந்தது. பூ மாலைகள் விரைவில் வாடிவிடும். ஆனால், உலர் பழங்களால் ஆன இந்த மாலை ஓராண்டு வரை பொலிவு மாறாமல் இருக்கும்" என்று சகோதரர்கள் கூறினர்.

நேற்று நிலக்கோட்டையில் உள்ள கடையில் காட்சிப்படுத்தப்பட்ட உலர் பழங்களால் ஆன இந்த மாலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுசென்றனர். நிலக்கோட்டையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்திற்கு பூ மாலைகள் கட்டி வாகனங்களில் கோயில் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE