காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆரணவல்லித் தாயார் சமேத உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் ஸ்ரீ ஊரகத்தான் சந்நிதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சந்நிதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சந்நிதி, கார்வான பெருமாள் சந்நிதிஎன 4 திவ்யதேசங்கள் ஒரேஇடத்தில் இருப்பது சிறப்பு பெற்றது. இந்த திருத்தலம் திருமழிசையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.
இந்தக் கோயில் மூலவர் ஓங்கி உயர்ந்து உலகை அளக்கும் பெருமாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் கடந்த 2007-ம் ஆண்டு குடமுழுக்குவிழா நடைபெற்றது.
இதனால் கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளும் புதுப்பிக்கப்பட்டன.
இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இந்திய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோயில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் ராஜகோபுரம், சந்நிதி கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி சம்ப்ரோக்ஷண விழாவை நடத்தினர்.
இந்த விழாவில் காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்னர்.