கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர், தமது மனைவியுடன் இமயத்தில் உள்ள பதரிகாஸ்ரமத்தில் (பத்ரிநாத்) வாழ்ந்துவந்தார். புத்திரப்பேறு வேண்டி நெல்மணிகளால் சாலியக்ஞம் என்ற யாகம் செய்து விஷ்ணுவை வேண்டினார். மகாவிஷ்ணுவும் மகிழ்ந்து புரு புண்ணியரின் விருப்பத்தை பூர்த்தி செய்தார். சாலியக்ஞம் என்ற யாகத்தின் பயனாக பிறந்ததால் புருபுண்ணியரின் புத்திரருக்கு சாலிஹோத்திரர் என்று பெயர். மிகச்சிறந்த மகரிஷியாக விளங்கிய சாலிஹோத்திரர் ஒவ்வொரு திருத்தலத்துக்காக சென்று பெருமாளை வழிபட்டு, தீர்த்தயாத்திரை சென்றார்.
தென்னகத்தில் வீட்சாரண்யம் எனப்படும் இடத்தை வந்தடைந்த சாலிஹோத்திர மகரிஷி, அங்கு ‘ஹ்ருதத்த பாபநாசினி’ என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு, அங்கேயே ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் தவம் செய்து வந்தார்.
தினந்தோறும் அரிசியை மாவாக்கி, மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து எம்பெருமானுக்கு அதனை அமுது படைப்பார். பின்னர் அதில் ஒரு பாதியை யாராவது ஒருவருக்கு வழங்கி, அவர் உண்ட பிறகே, மற்றொரு பாதியை தான் உண்பார்.
இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க, தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லை என்று முதியவர் கேட்க, தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார்.
அதனையும் உண்டு முடித்த எம்பெருமான், “உண்ட மயக்கத்தால் மிகவும் களைப்பாக உள்ளது, படுக்கச் சற்று இடம் வேண்டும். எங்கு படுக்கலாம்? என்று கேட்க, சாலிஹோத்திரர் தமது குடிசையைக் காட்டி, “இவ்வுள் தேவரீருடையதே. இங்கு சயனிக்கலாம்” என்றார்.
உடனே தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான், தெற்கே திருத்தலையை வைத்துச் சயனித்தார். சாலிஹோத்தரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
“இதே திருக்கோலத்தில் எம்பெருமான் இவ்விடத்திலே அருள்பாலிக்க வேண்டும்” என சாலிஹோத்திரர் பிரார்த்தித்தார்.
ஸ்ரீ மந் நாராயணனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து, இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி வீரராகவப் பெருமாளாக காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது.
அத்தலம் தான் எவ்வுள் என்றும், இவ்வுள் என்றும் அழைக்கப்படும் திருவெவ்வுள். தற்போது இத்தலம் திருவள்ளூர் என மாறிவிட்டது.
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மார்க்கத்தில் திருவள்ளூர் அமைந்துள்ளது. இங்கு சயனத் திருக்கோலத்தில் வீரராகவப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் கனகவல்லி எனப்படும் வஸுமதி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். சாலிஹோத்திரர் தவமிருந்த ‘ஹ்ருதத்த பாபநாசினி’ என்னும் தீர்த்தம் தற்போது பெரிய தெப்பக்குளமாக இக்கோயிலின் அருகே அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்து பெருமாளை வழிபடுவதற்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் கடும் கூட்டம் குவியும்.