திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா 5-ம் நாளான இன்றிரவு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அப்போது எதிர்திசையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சிவன் கோயிலை சேர்ந்தனர்.

இத்திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.

இன்று காலை 7 மணிக்கு சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். தொடர்ந்து சிவன் கோயிலிருந்து சுவாமி, அம்மன் சன்னதி தெருவிலிருக்கும் ராமநாதபுரம் சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேகம் அலங்கார தீபாராதனை ஆகி மீண்டும் கோயிலை சேர்ந்தது. மாலை 4 மணிக்கு சிவன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். அப்போது 7 மணிக்கு சிவன் கோயிலின் முன்பக்க மரகதவு சாத்தப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கீழரதவீதி முகப்பிலிருந்து சுவாமி, அம்மனுக்கு காட்சி கொடுத்ததும் மரக்கதவு திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அப்போது எதிர் திசையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தங்கமயில் வாகனத்தில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தனர்.

திருவிழாவின் 6-ம் நாளான நாளை (29-ம் தேதி) காலை 7 மணிக்கு சிவன் கோயிலிருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மீண்டும் கோயிலை சேருகிறார். பின்னர் சிவன் கோயில் முன்பு பந்தல் மண்டபத்தில் ஊடல் தீர்த்து கீழரதவீதியில் உள்ள செந்தில் அருட்பணி கட்டளை திருவாவடுதுறை ஆதீனம் மண்டகப்படி சேருகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. சுவாமி, அம்மன் சிவன் கோயில் சேருகின்றனர்.

இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், வள்ளி அம்மன் இந்திர விமானத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர். நாளை மறுநாள் (30-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், மாலையில் 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE