காக்கும் கார்த்திகைச் செல்வன் - 32

By கே.சுந்தரராமன்

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படுகிறது. அகத்திய முனிவர் இத்தலத்தில் ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திர பெருவிழாவின்போது இந்தக் கோயிலில் நடைபெறும் பால்காவடி விழா பிரசித்தம். கையில் யோக வேல் ஏந்தி பாலமுருகனாக முருகப் பெருமான் அருள்பாலிக்கும் தலம் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

அகத்திய முனிவர்

புராணக் கதைகளின்படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தென்னாடு தாழ்ந்தது. அதை உயர்த்தும் பொருட்டு, சிவபெருமான் அகத்திய முனிவரை தென்பகுதிக்கு அனுப்பினார். அதன்படி பொதிகை மலையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார் அகத்திய முனிவர். அப்படி பயணம் செய்யும் வழியில் அமைதியான சூழலில் உள்ள வனத்தைக் கண்டு அங்கேயே ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார்.

அருகே தாமிரபரணி ஆற்றையும் உருவாக்கினார். பொதிகை மலையின் நீர்வீழ்ச்சி அருகே இருந்த முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதன் காரணமாக, முருகன் கோயில் அகத்தியர் கோயில் என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டது. நீண்ட காலம் அகத்திய முனிவர் இக்கோயிலில் தங்கியிருந்த நிலையில் தமிழில் ‘அகத்தியம்’ என்ற இலக்கண நூலை எழுதினார். அகத்திய முனிவர் தமிழ் மொழி மீதும், முருகப் பெருமான் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை பல நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட அகத்திய முனிவர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி சேலம் பகுதியில் உள்ள சீலநாயக்கன்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும், பால முருகனை பூஜை செய்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.

கோயில் அமைப்பும் சிறப்பும்

மூலவர் பால சுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் மயில் வாகனத்துடன், கையில் யோக வேலுடன் அருள்பாலிக்கிறார். இடதுபக்கம் விநாயகப் பெருமானும், வலது பக்கம் நந்திதேவருடன் கூடிய சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். சொர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவர், நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ராதேவியும் (ஸ்ரீசக்கரம்), 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஸ்ரீசக்கரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியதாக உள்ள ஸ்ரீசக்கரத்தின் ஒரு பக்கத்தை குடிலில் காணலாம். ஸ்ரீசக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் மரத்தடியில் புலித்தோல் மீது அமர்ந்தபடி அகத்திய முனிவர் தியான நிலையில் உள்ளார். குடிலில் அகத்திய முனிவரின் ரிஷிபத்தினி லோபா முத்திரையுடன் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். மனிதர்களின் அனைத்து நோய்களையும் குணப்படுத்த வல்லதாக (செங்குத்து நிலையில்) ஸ்ரீசக்கரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகப் பெருமான் கோயிலுக்கு எதிரில் உள்ள கபிலர் குகையில் தவக்கோலத்தில் கபிலர் புடைப்புச் சிற்பமாக மரம், பசு, சூலாயுதத்துடன் உள்ளார். சிவராத்திரி சமயத்தில் அமாவாசை பிறக்கும் நேரத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்வதாக ஐதீகம்.

பாபநாச புராண ஓலைச்சுவடி மற்றும் கொங்கு மண்டல சதகம் மூலம் இங்கு சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் வாசம் செய்துள்ளனர் என்பதை அறிகிறோம். கிளி வடிவில் சுகரிஷியும், கன்வ ரிஷியும் தவம் செய்துள்ளனர். கோயிலில் உள்ள குகைகள் மூலம், இக்கோயிலில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

பலவிதமான நோய்களை போக்கும் மலையாக ஊத்துமலை (ஸ்தல மலை) உள்ளது. சித்தர்களின் சுவாசம் நிறைந்த மலையாக இம்மலை அமைந்துள்ளது. சித்தர்களில் அகத்தியர் மட்டுமின்றி போகர், புலிப்பாணி, கபிலர், ரேணுகர் ஆகியோர் இங்கு தவம் மேற்கொண்டுள்ளனர். அகத்திய முனிவர் ஸ்ரீவித்யா ரகசியங்களை சித்தர்களுக்கு உபதேசித்துள்ளார். குறிப்பாக, ‘ககண மார்க்கப் பிரயோகம்’ எனும் வான்வெளியில் சஞ்சரிக்கும் மந்திரத்தை அகத்திய முனிவர் முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உபதேசித்துள்ளார். இதன் காரணமாக, மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல், சித்தர்கள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

மேலும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்று வற்றாத மூலிகை நீராக அனைவரது நோய்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ‘சப்தசாகரம்’ என்று அழைக்கப்படும் ஏழு விதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு, மூட்டு வலி போன்ற பலவிதமான குறைபாடுகளைச் சரி செய்யும் ஆற்றல் உடையதாகத் திகழ்கின்றன.

இக்கோயிலில் உள்ள சக்ர மஹா கால பைரவர் அனைத்து தோஷங்களையும் போக்குபவராக உள்ளார். மிகவும் பிரம்மாண்ட உருவம் கொண்ட இவர், ஒருவரது ஏழ்மைநிலையை மாற்றி அவரை செல்வந்தராக மாற்றக் கூடியவர் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் அமைந்திருக்கும் ரத்தின கோட்டையின் காவல் தெய்வமாக (ஆவரண தேவதை) கால பைரவர் உள்ளார். இங்குள்ள கால பைரவரின் சிலை தமிழகத்தில் உள்ள பைரவர் சிலைகளிலேயே பெரிய சிலை என போற்றப்படுகிறது. எட்டு கைகளுடன் அமைதி தவழும் முகத்துடன் உள்ள கால பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபட்டால், அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை. தினமும் கால பைரவருக்கு மாலை 5 முதல் இரவு 8-30 வரை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கால பைரவர்

ஸ்கந்த குரு கவசம் மகிமை

ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் ‘ஸ்கந்த குரு கவசம்’ என்பது முருகனைப் புகழ்ந்து உரைக்கும் தமிழ்ப் பாடல் ஆகும். தந்தைக்கே குருவாக இருந்து உபதேசம் செய்த கந்தப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாக இருப்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

குரு ஒருவரை வழி நடத்தக்கூடிய ஆன்மிக ஆசிரியர். ஒருவரது வாழ்க்கையில் இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்ற உதவுகிறார். ஞானத்தின் ஒளியை நோக்கி ஒருவரை அழைத்துச் செல்கிறார். குருவின் வழிகாட்டுதல் ஒருவரை பூமிக்குரிய வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து விடுவிக்கிறது. ஒரு குருநாதர் அருகில் இருந்து வழிநடத்துவதுபோல் இந்த கந்த குரு கவசம் உடன் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

திருவிழாக்கள்

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி பதினெட்டு, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், மார்கழி பூஜை, தைப் பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும், ஆங்கில புத்தாண்டு, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை, விசாக நட்சத்திர தினம், பூச நட்சத்திர தினம் ஆகிய நாட்களில் எண்ணற்ற பக்தர்கள் இங்கு வந்திருந்து நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நாட்களில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பாடி முருகப் பெருமானை போற்றுகின்றனர்.

திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் பல வாகனங்களில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் காலையில் முருகப் பெருமானுக்கு இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, வாசனை திரவியங்கள் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெறும். மாலையில் கந்த புராணம், கந்தனின் திருவிளையாடல், திருப்புகழ் மகிமை தொடர்பான சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.

சுவாமி, அம்பாள், முருகப் பெருமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். இத்தலத்துக்கு வந்து பால சுப்பிரமணியரையும், ஆதி சக்தியான பாலதிரிபுர சுந்தரியையும், சக்ராதேவியையும் வழிபாடு செய்தால் தொழில் வளம் பெருகி, வியாபாரம் மேன்மை அடையும், வாழ்வில் நலம் பெறலாம் என்பது ஐதீகம்.

ஆண்டு முழுவதும் இங்கு நடைபெறும் வழிபாட்டு பூஜைகளில் வலம்புரி சங்கு அபிஷேகம், ஆகர்ஷண பைரவர் பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, குருஜி பூஜை, லட்சார்ச்சனை, புஷ்ப அபிஷேகம், 108 கலச பூஜை, ருத்ராட்ச பூஜை ஆகியன குறிப்பிடத்தக்கவை. பக்தர்கள் தவறாமல் இந்த பூஜைகளில் கலந்து கொண்டு, தல விருட்சங்களான நாவல் மரம், அரச மரம், மருத மரம் ஆகியவற்றுக்கும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE