விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய சுவாமி பராசர பட்டர், மகாலட்சுமி தாயாரின் திருக்கல்யாண குணங்களை வர்ணிக்கக் கூடிய ‘குணரத்ன கோசம்’ என்ற ஸ்தோத்திர நூலை இயற்றி இருக்கிறார்.
அதில் சீதாபிராட்டியின் பெருமை, ராமபிரானுடைய பெருமை என்று இரண்டாகப் பிரித்து, சீதையினுடைய பெருமையே உயர்ந்து நிற்கிறது என்று தீர்ப்புச் சொல்கிறார்.
சீதாபிராட்டியின் பெருமை ஏன் உயர்ந்து நிற்கிறதாம்..?
தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கும் சீதாபிராட்டியின் தன்மையானது, ராமனுடைய கருணையைக் காட்டிலும் உயர்ந்து நின்றது என்று பராசர பட்டர் தீர்ப்பளிக்கிறார்.
அது எப்படி சாத்தியம்?
விபீஷணன், ராமனுடைய திருவடியைப் பிடித்துக் கொண்டபோது அவனை ரட்சித்து அருளினான் பரமாத்மா.
சீதாபிராட்டியோ ஒரு படி மேலே போனாள்.
இந்திர புத்திரனான காகாசுரன், சீதாபிராட்டியிடம் அபசாரமாக நடந்து கொண்டான். பிராட்டியின் அழகில் மயங்கிய அவன் காகம் போன்று உருவமெடுத்தான். தாய் என்றும் எண்ணாது, தாயின் மார்பை தனது அலகால் தீண்டினான். வலியாள் தாய் துடித்தாள். அவனைத் தண்டிப்பதற்காக பகவான் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். அஸ்திரத்துக்கு பயந்து அசுரன் ஓடத் தொடங்கினான்.
இந்திரனாலும் கைவிடப்பட்டு, திரிமூர்த்திகளாலும் கைவிடப்பட்டு ஊர் ஊராகப் போய் வீடு வீடாக அபயம் கேட்டு காகாசுரன் அலைந்தான். ஆனாலும் ராமபாணத்தில் இருந்து அதனால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
அசுரனுக்கு எங்கும் உதவி கிட்டவில்லை.
கடைசியில் ஸ்ரீராமனிடத்திலே வந்து சேர்ந்தான்.
சரணாகதி என்று அவன் திருவடியிலே வந்து இறக்கையைப் படியச் செய்தான். விழுந்தவனின் தலை, ராமனின் பாதங்களை நோக்காமல் எதிர் திசை நோக்கித் திரும்பியிருந்தது.
சீதாபிராட்டி பார்த்தாள் - “இந்தக் குழந்தைக்கு சேவிக்கத் தெரியவில்லையே!” என்று எண்ணியபடி காகாசுரனின் தலையை ராமனின் திருவடி நோக்கித் திருப்பி வைத்தாள்!
எத்தகைய கொலைக் குற்றம் புரிந்திருக்கிறான் அவன்! அப்படிப்பட்டவனை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் அல்லவா!
ஆனால் மகாலட்சுமியின் காருண்யத்தைப் பார்த்து பகவான் தணிந்து போனான். காகாசுரனுடைய ஒரு கண்ணை மட்டும் போக்கியதோடு நிறுத்திக் கொண்டான்.
அதனால் தான் இன்றைக்கும் காக்கைகளுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது. தலையைத் திருப்பித் திருப்பி, சாய்த்துத்தான் அதனால் பார்க்க முடியும்.
காகாசுரனின் தலையைத் திருப்பி வைத்து அவனுக்கு அனுக்ரஹம் பெற்றுத் தந்ததை காக்காட்சி நியாயம் என்று சொல்வார்கள்.
தனக்கு தீங்கு செய்தவனையும், தாயின் கருணையோடு பகவானை தஞ்மடைய வைத்து, அவன் உயிரைக் காத்த சீதாபிராட்டியின் கருணை மேலானது தானே!