நவ.12ல் திருப்பதியில் கட்டண சேவைகள் அனைத்தும் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு

By காமதேனு

நவம்பர் 12ம் தேதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நவம்பர் 12ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 12ம் தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும்.

ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சகோதரராக கோயிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். உடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று மாலை திருப்பதி மலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதேநேரத்தில் சகஸ்ரநாம தீப அலங்கார உற்சவ சேவை மாலை 5 மணிக்கு வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE