சிறுவனாக வந்த ரங்கநாதர் அருளிச் செய்த ஸ்லோகம்

By மு.இசக்கியப்பன்

சுவாமி நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழிக்கு, 36,000 படி வியாக்கியானத்தை சுவாமி வடக்கு திருவீதிப்பிள்ளை அருளிச் செய்தார். பகவத் ராமானுஜர் காலத்தில் சிறந்து விளங்கிய வைணவ சம்பிரதாயத்தை 14-ம் நூற்றாண்டில் அவதரித்த சுவாமி மணவாள மாமுநிகள் ஸ்ரீரங்கத்தில் மீண்டும் நிலைநாட்டினார். திருவாய்மொழி 36,000 படி வியாக்கியானத்தை ஸ்ரீரங்கம் பெரியபெருமாள் முன்னிலையில் சுவாமி மணவாள மாமுநிகள் காலட்சேபம் செய்யத் தொடங்கினார். பரிதாபி ஆண்டு, ஆவணி மாதம் 30-ம் தேதி வியாழக்கிழமை (15.9.1432) அன்று இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

சுவாமி நம்மாழ்வார்

சுவாமி நம்மாழ்வார் இயற்றிய 1,102 பாசுரங்களைக் கொண்ட நூல் திருவாய்மொழி. நான்கு வேதங்களில் சாம வேதத்தின் சாரமாக இனிய தமிழில் அமைந்த நூல் இது.

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாத பெருமாள் கோயிலின் அருகேயுள்ள புளிய மரத்தின் அடியில் யோக நிலையில் இருந்தவாறே சுவாமி நம்மாழ்வார் இதனை இயற்றினார். அவரது சீடர் சுவாமி மதுரகவி ஆழ்வார் அதனை ஏடுபடுத்தினார். வைணவத்துக்கு அடிப்படையான கருத்துக்கள் அனைத்தும் இதில் பொதிந்துள்ளன.

திருவாய்மொழிக்கு ஐந்து சுவாமிகள் வியாக்கியானம் அருளிச் செய்திருக்கிறார்கள். அதில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமி வடக்கு திருவீதிப்பிள்ளை 36,000 படி வியாக்கியானம் அருளிச் செய்தார். ஒரு படி என்பது 16 எழுத்துக்களைக் கொண்டது. குற்றெழுத்துக்கள் இதில் சேராது. இப்படியே திருவாய்மொழியின் 1,102 பாசுரங்களுக்கும் மிக விரிவான விளக்கத்தை தமது குருவான சுவாமி நம்பிள்ளையின் அருளால் அருளிச் செய்தவர் சுவாமி வடக்குத் திருவீதிப்பிள்ளை.

ஒருமுறை சுவாமி நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றார். அங்கு கோயில் ஆழ்வார் எனப்படும் பூஜை அறையில் பட்டுத்துணியில் சுற்றப்பட்டிருந்த ஒரு சுவடிக்கட்டு இருந்தது. பெருமாளுக்கு திருவாராதனம் செய்யும் போது, அந்த பட்டுத்துணியில் சுற்றப்பட்டிருந்த சுவடிக்கட்டுக்கும் சேர்த்து வடக்குத் திருவீதிப்பிள்ளை பூஜைகள் செய்தார். நிவேதனமும் காண்பித்தார்.

இதைப்பார்த்த சுவாமி நம்பிள்ளை, “அது என்ன” என்றார்.

“தாங்கள் திருவாய்மொழி காலட்சேபம் செய்தபோது, அதனை அடியேன் குறிப்பெடுத்து வந்தேன். அதனை மிக விரிவாக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தேன். அவைதான் இந்தக் கட்டுகள் சுவாமி” என்றார் வடக்கு திருவீதிப்பிள்ளை.

அவைகளை சுவாமி நம்பிள்ளை வாங்கிக் கொண்டார். அப்போது அங்கிருந்த மாதவாசார்யர் என்பவரிடம் அந்தக் கட்டுகளைக் கொடுத்தார். மைசூரு அருகேயுள்ள மேல்கோட்டையைச் சேர்ந்தவர் மாதவாசார்யர்.

“நமது வைணவ சம்பிரதாயத்தை வருங்காலத்தில் பாதுகாக்கப் போகும் நூல் இது. இதனை நீர் மிகவும் பத்திரமாக மேல்கோட்டைக்கு எடுத்துச் சென்று அதனை பாதுகாத்து வர வேண்டும். ஓராண்வழி சம்பிரதாயப்படி, இதனை வாய்மொழியாக ஒருவருக்கு மட்டுமே உபதேசித்து வர வேண்டும். வருங்காலத்தில் நமது சம்பிரதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. அதிலிருந்து இந்த சனாதன தர்மம் மீண்டு வருவதற்கு இந்த நூல் முக்கிய காரணமாக இருக்கப் போகிறது” என்று அசரிரீ உரைத்தது போல் சுவாமி நம்பிள்ளை கூறினார்.

இவையெல்லாம் 12-ம் நூற்றாண்டில் நடைபெற்றன. அங்கிருந்தவர்களுக்கு அப்போது அதன் விளக்கம் புரியவில்லை. அவர் சொன்ன படியே பிற்காலத்தில் அந்த ஆபத்து வந்தது.

13-ம் நூற்றாண்டில் அன்னியர்கள் படையெடுத்து வந்தார்கள். வடமாநிலங்கள் தொடங்கி தெற்கே மதுரை வரையிலும் அன்னிய படைகள் புகுந்தன. கோயில் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். கோயில்கள் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டன. நமது கலாச்சாரத்தையும், தொன்மையையும் தேடித்தேடிச் சென்று அழித்தார்கள். பல லட்சம் உயிர்கள் கொலை செய்யப்பட்டன. பல லட்சம் பேர் மதம் மாற்றப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் மட்டும் 12,000 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை பன்னீராயிரம் தலைவெட்டிக் கலவரம் என்று ஸ்ரீரங்கம் கோயிலொழுகு ஏடுகள் குறிப்பிடுகின்றன.

இவற்றையெல்லாம் தனது ஞான திருஷ்டியால் முன்பே அறிந்திருந்ததாலேயே, திருவாய்மொழி 36,000 படி நூலை மைசூருக்கு கொண்டு போகச் செய்தார் சுவாமி நம்பிள்ளை. அங்கு விஜயநகரப் பேரரசர்கள் ஆட்சி செய்து வந்ததால், அந்த நூல் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது.

அதன்பிறகு 13-ம் நூற்றாண்டில் திருவாய்மொழிப்பிள்ளை என்ற சுவாமி மதுரை அருகே கொந்தகை என்ற ஊரில் அவதரித்தார். மதுரை பாண்டிய மன்னனிடம் அமைச்சராகவும், நாட்டின் நிர்வாகஸ்தராகவும் விளங்கினார். அதன்பின் வைணவ ஆசார்யராகி, சம்பிரதாய விஷயங்களை தேடித்தேடிச் சென்று சேகரித்தார். நாட்டுக்கான ஆபத்துகள் எல்லாம் நீங்கியிருந்தன. இதனை உணர்ந்து மைசூருக்கு சென்றிருந்த அவர், அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த திருவாய்மொழி 36,000 படி வியாக்கியான சுவடிகளை அங்கிருந்து மீண்டும் தமிழகத்துக்கு எடுத்து வந்தார். ஆழ்வார்திருநகரியில் மடம் அமைத்து அங்கேயே அந்தச் சுவடிகளை பாதுகாத்து வந்தார்.

சுவாமி மணவாள மாமுநிகள்

ஆழ்வார்திருநகரியில் 14-ம் நூற்றாண்டில் சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்தார். தமது சீடராக சேர்ந்த மாமுநிகளுக்கு, திருவாய்மொழி 36,000 படி வியாக்கியானத்தை முழுமையாக கற்பித்தார். இதனால் மாமுநிகள் அதில் பாண்டித்தியம் பெற்றார். குருவின் ஆணைப்படி ஆழ்வார்திருநகரியில் இருந்து சுவாமி மணவாள மாமுநிகள் ஸ்ரீரங்கத்துக்கு சென்று அங்கு தமது மடத்தை நிறுவினார். அவருடனேயே திருவாய்மொழி 36,000 படி நூலும் ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் சென்றது.

12-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் சுவாமி நம்பிள்ளையின் அருளால் சுவாமி வடக்குத் திருவீதிப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட அந்த நூல் மைசூருக்கு சென்றது. பின்னர் சுவாமி திருவாய்மொழிப் பிள்ளையால் ஆழ்வார்திருநகரிக்கு எடுத்து வரப்பட்டது. சுமார் 200 ஆண்டுகள் கழித்து சுவாமி மணவாள மாமுநிகளால் ஸ்ரீரங்கத்துக்கே மீண்டும் எடுத்து வரப்பட்டது.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் காலத்திலும், சுவாமி நம்பிள்ளை காலத்திலும், சுவாமி பிள்ளை லோகாசார்யர் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் மிகச் சிறப்பாக விளங்கிய ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயம், 14-ம் நூற்றாண்டில் சுவாமி மணவாள மாமுநிகள் காலத்திலும் மிகவும் பிரபலமானது.

அன்று பரிதாபி ஆண்டு, ஆவணி மாதம் 30-ம் தேதி வியாழக்கிழமை (15.9.1432) அன்று, சுவாமி நம்பெருமாள், “மாமுநிகளின் திருவாய்மொழி திவ்யபிரபந்த 36,000 படி காலட்சேபத்தை கேட்பதற்கு விருப்பம் கொண்டோம். மாமுநிகளை நமது பெரிய மண்டபத்துக்கு அழைத்து வாருங்கள்” என்று, அர்ச்சகர் மூலமாக அருளப்பாடிட்டார்.

மறுநாள், பரிதாபி ஆண்டு, ஆவணி மாதம் ஆவணி 31-ம் தேதி, சுக்ல சதுர்த்தி, சுவாதி நட்சத்திரமும் கூடிய, வெள்ளிக்கிழமை (16.9.1432) அன்று, வரலாற்றின் ஈடு இணையற்ற வைபவம் அரங்கேறியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுவாமி நம்பெருமாளும், விஷ்வக்சேனர், கருடாழ்வார் உள்ளிட்ட நிதியசூரிகளும், பன்னிரு ஆழ்வார்களும், ஓராண்வழி ஆசார்யர்களும் எழுந்தருளி அந்த மண்டபத்தை அலங்கரித்தார்கள். அன்று திருவாய்மொழி காலட்சேபத்தை மிக விரிவாக தொடங்கினார் சுவாமி மணவாள மாமுநிகள்.

காலட்சேபம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றது. பிரமாதிச ஆண்டு, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், பவுர்ணமி திதி, ஞாயிற்றுக்கிழமை (9.7.1433) அன்று, மணவாள மாமுநிகளின் பகவத் விஷயம் காலட்சேபம் நிறைவுற்று, அன்றைக்கு சாற்றுமுறை. அதுவரை சுவாமி நம்பெருமாள் தமது அனைத்து உற்சவங்களையும் நிறுத்தி வைத்து, பெரிய மண்டபத்திலேயே இருந்து மாமுநிகளின் காலட்சேபத்தைக் கேட்டார். திருவரங்கமே பரமபதமாக மாறியது.

சாற்றுமுறை நாளன்று, மாமுநிகளுக்கு சிறப்பான உபசரணைகள் நிறைவேற வேண்டும், உரியமுறையில் கவுரவிக்க வேண்டும் என்று சர்வேஸ்வரனே ஆசைப்பட்டார். மாமுநிகளுக்கு சிறப்பு செய்ய தாம்பாளங்களில் பழ வர்க்கங்கள், உத்தரீயங்கள் ஆகியவை கருட மண்டபத்தில் எடுத்து வைக்கப்பட்டன. சாற்றுமுறை நாளில் காலட்சேபம் சாதிப்பதற்காக மடத்தில் இருந்து, சுவாமி மணவாளமாமுநிகள் கருட மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

திருவாய்மொழியில் 1,141-வது பாசுரமான ‘சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவினில் பெரும்பாழேயோ” என்ற பாசுரத்துக்கு ஈடு வியாக்யானத்தை, முன்னவர்கள் அருளிச்செய்த ஐந்து வியாக்யானங்களில் இருந்தும் சுவாமி அப்படி அப்படியே மேற்கொள்களை சாதித்தார். அடுத்து 1,102-வது கடைசி பாசுரமான, ‘அவாவறச் சூழ் அரியை..’ என்று தொடங்கி, ‘பிறந்தார் உயர்ந்தே’ என்று பூர்த்தியானது. அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் பேரானந்தத்தால், தங்களை மறந்து, திருவரங்கத்தை மறந்து, மாமுநிகளின் திருவாய்மொழி ஒன்றையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க ‘ரெங்கநாயகன்’ என்ற சிறுவன் கோஷ்டியினரை விலக்கியபடி, யாருக்கும் அஞ்சாமல் கருட மண்டபத்துக்கு நடுவே வந்தான். தங்களை மறந்திருந்த பெரியோர்கள், முதலில் அந்தச் சிறுவனை கவனிக்கவில்லை. சற்று நேரத்தில் அந்தச் சிறுவன் மண்டபத்தின் நடுப்பகுதியை நோக்கி நகர்ந்ததும், பெரியவர்கள் எல்லாம்,

‘எங்கே வருகிறாய்? எங்கே செல்கிறாய்’ என்று ஆளாளுக்கு கேட்டார்கள். ஆனால், அந்தச் சிறுவன் அஞ்சாமல் மையப்பகுதிக்கு வந்துவிட்டான்.

'ஸ்ரீசைலேஸ...' என்ற தனியன் உதயமான நிகழ்வை விளக்கும் ஓவியம்.

மணவாளமாமுநிகள் அமர்ந்திருந்த ஆசனத்துக்கும், அவருக்கு முன்பாக தாம்பாளங்கள் வைத்திருந்த பகுதிக்கும் நடுவே வந்து, மாமுநிகளை பவ்யமாக விழுந்து சேவித்தான். மாமுநிகளும் கருணை நிறைந்த கண்களுடன், அந்தச் சிறுவனை நோக்கி மலர விழித்தார். இங்கே ஏதோ ஓர் அற்புதம் நிகழப்போகிறது என்பதை எல்லோரும் உள்ளூர உணர்ந்தார்கள்.

அந்தச் சிறுவனின் திருவாயில் இருந்து,

“ஸ்ரீசைலேஸ தயாபாத்ரம்

தீபக்யாதி குணார்ணவம்;

யதீந்திர ப்ரணவம்;

வந்தே ரம்யஜாமாதரம் முநிம்”

- என்ற தனியன் ஸ்லோகம் வெளிப்பட்டது.

அதனைக் கூறியதும், மீண்டும் மாமுநிகளை விழுந்து சேவித்தான் அந்த சிறுவன். எல்லோரும் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கோஷ்டியினரின் பிரமை விலகுவதற்குள், அந்தச் சிறுவன் மூலஸ்தானத்தை நோக்கி ஓடிச்சென்று, பெரியபெருமாள் சந்நிதிக்குள் புகுந்தான், மறைந்தான். அர்ச்சகர்கள் சிலர் சந்நிதிக்குள் சென்று பார்த்தார்கள். அங்கு யாரும் இல்லை. அதன்பிறகுதான், பெரிய பெருமாளே சிறுவனாக வந்து, மாமுநிகளை வணங்கும் விதமாக அந்த ஸ்லோகத்தை சாதித்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.

மாமுநிகளை வணங்குகிறேன்

அந்த ஸ்லோகத்தின் விளக்கம்:

‘திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு பாத்திரமானவரும். ஞான பிரபத்திகளுக்கு கடல் போன்றவரும், ராமானுஜர் மீது அளவுகடந்த பிரேமை உடைய அழகிய மணவாளமாமுநியை வணங்குகிறேன்’ என்பது, ‘ஸ்ரீசைலேஸ’ என்று தொடங்கும் அந்த தனியன் ஸ்லோகத்தின் விளக்கம்.

மாமுநிகளை குருவாக ஏற்று, தாம் சீடராக ஓராண்டுக்கு இருந்து ஈடு முப்பத்து ஆறாயிரப்படியைக் கேட்ட சுவாமி நம்பெருமாள், அந்த நிகழ்வு நிறைவுற்ற நாளில், ‘மாமுநிகளை வணங்குகிறேன்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய பெருமை மணவாளமாமுநிகளைத் தவிர வேறு எந்த ஆசார்யருக்கும் கிட்டாதது.

இன்றைக்கு எந்த இடத்தில் பிரபந்த சேவாகாலம் தொடங்கினாலும், இந்த ஸ்லோகத்துடனேயே தொடங்க வேண்டும் என்பது பூர்வாசார்யர்களின் கருத்தாகும்.

*ஆனித் திருமூலம் நாள் - 3.7.2023

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE