திண்டுக்கல்: பழநி வைகாசி விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே 22) மாலை கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று (மே 21) மாலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் இன்று (மே 22) மாலை நடைபெற்றது. முன்னதாக, காலை 11.30 மணியளவில் சிம்ம லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதானைகள் நடைபெற்றது.
» திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
» ராமநாதபுரம் முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கொண்டாட்டம்
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரை அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ-வான வேணுகோபாலு, கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேர் நிலையை அடைந்தவுடன் தந்தப் பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மே 25-ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சிக்குப் பிறகு இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.