காஞ்சிபுரம் கோயில்களை தரிசிக்க ரூ.650-ல் மினி ஆன்மிக சுற்றுலா!

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்களை தரிசிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.650 கட்டணத்தில் ஒரு நாள் மினி ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறது. இந்த சுற்றுலா திட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி காலை 7.20 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சுற்றுலா பேருந்து புறப்படும். முதலில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கிருந்து காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். இதனைத் தொடர்ந்து 11 மணிக்கு தேநீர் இடைவேளை விடப்படும். இதனைத் தொடர்ந்து கோவிந்தவாடி குருபகவான் கோயிலுக்கு அழைத்துச் செல்வர்.

அங்கு மதிய உணவு இடைவேளை விடப்படும். அங்கிருந்து புறப்பட்டு இந்தப் பேருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கும், திருவாலங்காடு தேவார சிவாலயத்துக்கும் செல்லும். அங்கிருந்து திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், பின்னர் ஸ்ரீபெரும்புதூர் ராமனுஜர் கோயில் வந்து மீண்டும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை வந்தடையும்.

இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயிலை தரிசிக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்தி தரிசிக்கலாம் என்றும் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE