வைணவ குருபரம்பரையில் ஸ்ரீ மந் நாராயணன், ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ விஷ்வக்சேனர் ஆகிய முதல் மூவரும் பரமபதவாசிகள். நான்காவது ஆசார்யன் ஸ்ரீ நம்மாழ்வார் தொடங்கி அவருக்குப் பின் அவதரித்த மற்ற அனைவரும் பூமியில் பிறந்தவர்கள். சுவாமி நம்மாழ்வரை அடுத்து ஐந்தாவது ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ நாதமுனிகள்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி என்ற திருத்தலமே சுவாமி நம்மாழ்வார் அவதரித்த தலம். கலியுகம் பிறந்த 42-வது நாள் சுவாமி நம்மாழ்வார் இங்கு அவதரித்தார். அதிலிருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார் கோவிலில், குப்பக்குழி என்ற பகுதியில் நாதமுனிகள் அவதரித்தார்.
நாதமுனிகளின் 1200-வது அவதாரத் திருநாளை நடப்பு (2023-ம் ஆண்டு) ஆண்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் என்ற ஊரின் நடுவே கிழக்கு நோக்கி ஸ்ரீ வீர நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் சுவாமி வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீ ராஜகோபாலன், சுந்தர கோபாலன், ஸ்ரீனிவாசர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி நாச்சியார்.
இக்கோயிலில் 8-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் வைணவத்துக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அப்போது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று வீரநாராயணப் பெருமாளை சேவிக்க இக்கோயிலுக்கு வந்தது. அவர்கள், கும்பகோணம் ஆராவமுதப் பெருமாள் குறித்து, சுவாமி நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரமான,
“ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்திருக்குடந்தை!
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
- என்று தொடங்கி படிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து 10 பாடல்களைப் படித்தார்கள். பத்தாவது பாசுரமான,
“உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே”
-(திருவாய்மொழி 5.8.10.) என்று நிறைவு செய்தார்கள்.
இக்கோயிலில் அர்ச்சகரின் மகனாக இருந்த நாதமுனிகள் இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் மட்டுமின்றி நாலாயிர திவ்ய பிரபந்தமும், வழக்கத்தில் இல்லாமல் மறைந்திருந்தது.
“நீங்கள் பாடிய கடைசி பாசுரத்தில் ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று உள்ளதே. அப்படியானால் மீதம் 999 பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா?” என்று நாதமுனிகள் கேட்டார்.
கும்பகோணத்தில் இருந்து வந்திருந்தவர்கள், ‘எங்கள் ஊர் பெருமாளாகிய ஆராவமுதப் பெருமாள் பற்றிய இவை 10 பாடல்கள்தான் எங்களுக்கு தெரியும். மற்றவை தெரியாது’ என்றனர்.
அப்போது முதலே நம்மாழ்வாரின் 1,000 பாடல்களையும் அறிய வேண்டும் என்ற ஆசை நாதமுனிகளுக்கு பிறந்தது.
நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரிக்கு சென்றால் இதுபற்றிய தகவல் கிடைக்கும் என்று தெரியவந்தது. காட்டுமன்னார்கோவிலில் இருந்து, ஆழ்வார்திருநகரிக்கு நடந்தே வந்தார். அங்கு ஆழ்வார் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. திருவாய்மொழி பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.
மனம் வருந்தினார்.
அப்போது மற்றொரு தகவல் தெரியவந்தது. சுவாமி நம்மாழ்வாரின் சீடராகிய சுவாமி மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருக்கோளூருக்கு சென்றால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறினர்.
அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோளூருக்கு சென்றார் நாதமுனிகள். அங்கு மதுரகவி ஆழ்வாரின் பரம்பரையில் வந்த பராங்குச தாசர் சுவாமியை சந்தித்தார். அவருக்கும் திருவாய்மொழி தெரியவில்லை. ஆனால், நம்மாழ்வார் குறித்து மதுரகவி ஆழ்வார் இயற்றிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற 11 பாசுரங்களை, பராங்குச தாசர் உபதேசம் செய்ய, அதனை நாதமுனிகள் மனனம் செய்து கொண்டார்.
மீண்டும் ஆழ்வார்திருநகரி வந்தார். அங்கு ஆழ்வார் தவமிருந்த புளியமரத்தின் அடியில் அமர்ந்து, 12,000 முறை எவ்வித இடையூறுமின்றி ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரத்தைப் படித்தார்.
உடனே சுவாமி நம்மாழ்வார் காட்சி தந்தார். தான் அருளிச்செய்த பாசுரங்கள் மட்டுமின்றி, பன்னிரு ஆழ்வார்களும் அருளிச்செய்த ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ முழுவதையும் நாதமுனிகளுக்கு கற்பித்தார்.
இப்படித்தான், சுவாமி நாதமுனிகளால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் மீண்டும் கிடைத்தது.