‘காதலும் பரிவும் நிறைந்தவன் கிருஷ்ணன்!’ - ஓஷோ | கோகுலாஷ்டமி ஸ்பெஷல் பகிர்வு

By KU BUREAU

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பல பெயர்களில் கொண்டாடப்படும் பகவான் கிருஷ்ணனின் பிறந்த நாள். ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளன்று வருவதாகும். தீமைகளும் துயரங்களும் நிறைந்த துவாபர யுகத்தில் இருள் சூழ்ந்த இரவில் கிருஷ்ணனின் பிறப்பு நிகழ்ந்தது.

கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும் நேரத்தில் மதுரா நகரத்தில் ஒரு கொடுஞ்சிறையில் பிறந்த கிருஷ்ணனின் வாழ்வோ ஒளியை நோக்கியது. கிருஷ்ணன் என்ற ஆளுமை குறித்து ஓஷோ பேசியதன் ஒரு பகுதி இங்கே..

“கிருஷ்ணனின் வாழ்க்கை முழுக்க நேர்மறையானது; அங்கே எதிர்மறை அம்சங்களே கிடையாது. அவர் வாழ்க்கையின் எந்த அம்சத்தையும், தான் என்னும் தனிச்சுய அகந்தையைக் கூட அவர் நிராகரிக்கவில்லை.

தனிச்சுயத்தை அகல விரித்துக்கொண்டே போனால், உலகத்தை அரவணைத்துவிடலாம் என்பதே அவரது பரிந்துரையாக உள்ளது. அப்படி விரித்து அரவணைத்துக்கொள்ளும்போது, வெளியே ‘நீ’ என்ற ஒன்று இல்லாமல் போகும்போது ‘நான்’ என்று சொல்வதற்கும் அவசியமில்லாமல் போகிறது.

தன்னை அகன்று விரித்து எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்ளும் அந்த ஆழத்தில்தான் ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற உணர்வுநிலை எழுகிறது. ‘நான் கடவுள், நானே பிரம்மம்’. இப்படிச் சொல்வதனால், நீ கடவுள் இல்லை என்பதல்ல. ‘நீ’ இல்லாத நிலையில் எஞ்சும் ‘நான்’-ஐக் குறிப்பது அது. மரங்களின் வழியாகச் செல்லும் காற்றாக நான் ஆவது அது.

சமுத்திரத்தில் தளும்பிக்கொண்டிருக்கும் அலையாக நான் ஆகும் நிலை அது. எது பிறக்கிறதோ அது நான். எது இறக்கவுள்ளதோ அது நான். நான் பூமி, நானே வானமும்கூட. என்னைத் தவிர வேறெதுவும் இல்லை, இந்நிலையில் இப்போது அங்கே இந்த ‘நான்’ கூட இல்லை. நானே எல்லாமுமாக எல்லா இடத்திலும் இருக்கும்போது, ஏன் ‘நான்’ என்று சொல்லப்போகிறேன்?

கிருஷ்ணனின் மொத்தமும் அபரிமிதத்தோடு அநாதியோடு விரிந்து வியாபித்திருக்கும் முழுமையாகும். ‘நானே கடவுள், நானே பிரம்மம்’ என்று அவன் சொல்லும்போது அது அகந்தையுணர்வில் சொல்லப்படுவதில்லை.

‘நான்’ என்பது வெறும் வார்த்தை. ஆனால், அதில் நானின் தன்மைகள் இல்லை. வாழ்க்கையை அதன் சகல பரிமாணங்களோடு, அதன் எல்லா வண்ணங்கள், பருவநிலைகளோடு ஏற்றுக்கொண்டவன் கிருஷ்ணன். அவன் மட்டுமே வாழ்க்கையை நிபந்தனைகளற்று ஏற்றுக்கொண்டவன்.

அவன் காதலைப் புறக்கணிக்கவில்லை. ஒரு மனுஷனாக அவன் பெண்களைக் கண்டு ஓடவில்லை. கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் எனினும் அவன் போருக்குப் புறமுதுகு காட்டவில்லை. காதலும் பரிவும் நிறைந்தவனாக இருந்தாலும் போருக்குச் சம்மதித்துச் சண்டையிடுகிறான். அவனது இதயமோ முழுமையாக அகிம்சையால் தோய்ந்தது.

ஆனாலும், தவிர்க்க முடியாத நிலையில் அவன் யுத்தத்தின் வெக்கை, குரோதத்துக்கிடையில் நிற்கிறான். அவன் அமிர்தத்தை ஏற்றுப் பருகியவன். அதேவேளையில் அவன் விஷத்தைக் கண்டும் கலங்கி ஓடாதவன்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE