திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

By KU BUREAU

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், வெள்ளி பல்லக்கில் கொடிபட்டம் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக, மஞ்சள், திரவியம், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான மங்கலப் பொருட்களால் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள், தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, கொடிமரத்துக்கு பட்டு சார்த்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் மத் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், நீதிபதி செல்லபாண்டி, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும்ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, உழவாரப்பணி செய்து கோயில் சேர்ந்தார்.

செப். 2-ம் தேதி தேரோட்டம்: ஆவணித் திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. வரும் 28-ம் தேதி குடைவரை வாயில் தீபாராதனை, 30-ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் உருகுசட்டசேவை, மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சார்த்தியும், 31-ம் தேதி அதிகாலை வெள்ளிசப்பரத்தில் வெள்ளை சார்த்தியும், பகலில் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்தியும் வீதியுலா நடைபெறுகிறது.

செப். 2-ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. செப். 4-ம் தேதி மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வருகின்றனர். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசகேரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE