தொடக்கமும், நிறைவும் திருப்பல்லாண்டே..!

By மு.இசக்கியப்பன்

பரமபதத்தில் வாழும் நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவனாக வீற்றிருப்பவன் ஸ்ரீமந் நாராயணன். பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவன். அனைத்து உயிர்களையும், உயிரற்றவைகளையும் தனது சொத்தாகக் கொண்டவன் எனத் தெரிந்தபோதும், ‘எம்பெருமானே நீ பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்’ என வாழ்த்தி தாய்க்குரிய மனோபாவத்துடன், தனது திருப்பல்லாண்டு பாசுரத்தை தொடங்கி இருக்கிறார் பெரியாழ்வார்.

பெரியாழ்வார்

கம்சன் போன்ற மல்லர்களை வீழ்த்திய பெருந்தோள்களைக் கொண்ட மணிவண்ணனே உன் திருவடிகள்தான் எங்களுக்கு காப்பு என்று நிறைவுகொள்கிறார். திருப்பல்லாண்டில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களும் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதாகவே அமைந்திருக்கின்றன.

வைணவ பாசுரங்களுக்கு தலைப்பிடும்போது, அது எந்த தமிழ் இலக்கண வகையைச் சேர்ந்ததோ அதையே தலைப்பாக்குவர். ஆசிரியப்பாவில் அமைந்ததால் திருவாசிரியம் என்றும், விருத்தப்பாவில் பாடப்பட்டவை திருவிருத்தம் என்றும், அந்தாதியில் பாடப்பட்டவை முதல் அந்தாதி, 2-ம் அந்தாதி என்றும் பெயர் சூட்டப்பட்டன.

அடுத்ததாக, அந்தப் பாடல் தொடங்கும் முதல் வார்த்தையையே தலைப்பாக வைக்கும் வழக்கமும் உண்டு. `அமலனாதிபிரான் என்னை ஆட்படுத்த விமலன்’ என்று தொடங்கும் பாசுரத்துக்கு `அமலனாதிபிரான்’ என்று பெயர். `கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுன்னப்பண்ணிய பெருமாயன்’ என்று தொடங்கும் பாசுரத்துக்கு `கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என ஆழ்வார்கள் பெயர் வைத்தனர்.

பெரியாழ்வார்

அதுபோலவே, பல்லாண்டு எனத் தொடங்கியதால், இப்பாசுரத்துக்கு `திருப்பல்லாண்டு’ என பெயர் அமைந்தது.

திருப்பல்லாண்டு பாசுரத்தில் உள்ள 12 பாடல்களில், முதல் இரண்டிலும், பெரியாழ்வார் பெருமானை நன்கு அனுபவித்து `பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக’ என்கிறார்.

அடுத்து, 3, 4, 5 ஆகிய பாடல்களில், மூன்று விதமானவர்களை அழைக்கிறார். பெருமாளை மட்டுமே விரும்பும் தன்மையுடைய பகவல்லயார்த்திகளை 3-ம் பாடலிலும், தங்கள் ஆன்மாவையே விரும்பும் கைவல்யார்த்திகளை 4-ம் பாட்டிலும், பொருள் இன்பத்தை வேண்டும் ஐஸ்வர்யார்த்திகளை 5-ம் பாடலிலுமாக அழைத்து, நீங்கள் எல்லோரும் பெருமாளை வணங்க வாருங்கள் என்கிறார்.

உலகத்திலுள்ள அனைத்து இயல்பினர்களுக்கும் அவனருள் கிட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் பெரியாழ்வாருக்கு.

அடுத்ததாக, 6, 7, 8 ஆகிய பாடல்களில், இம்மூன்று விதமானவர்களும், ஒவ்வொருவராக பெருமாளைத் தொழ வந்து விட்டனர் என்கிறார்.

மீண்டும், 9, 10, 11 ஆகிய பாடல்களில் இவர்கள் ஒவ்வொருவருடனும் தான் சேர்ந்து கொண்டு பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார். கடைசியாக 12-வது பாடலில், திருப்பல்லாண்டை சேவித்தால் நமக்கு ஏற்படும் பயனைக் கூறுகிறார். இப்பூவுலகில் பல்லாண்டு சேவிப்பவர்கள், மறுமையில், பரமபதம் அடைந்து, அங்கு பரமபதநாதனின் திருமுன்னிலையில் பல்லாண்டு சேவிக்கும் பேறு பெறுவர் என்கிறார்.

இப்பாசுரம் அனைத்து மங்கலங்களையும் கொடுக்க வல்லது. நமக்கு ரட்சையாக விளங்குவது. எல்லா ஆபத்துகளில் இருந்தும் காக்க வல்லது.

பெருமாள் கோயில்கள் அல்லது வைணவர் இல்லங்களில் எப்போது எந்தவித காரியம் தொடங்கினாலும் திருப்பல்லாண்டுடன் தொடங்குவார்கள். திருப்பல்லாண்டுடனேயே நிறைவு செய்வார்கள்.

பெரியாழ்வார் போற்றி -6

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE