இறைவனை வழிபடுகையில் தன்னை பக்தனாகவும், அடியவனாகவும் நினைத்து வழிபடுவது ஒரு வழிமுறை. பெரும்பாலான ஆழ்வார்களும், நாயன்மார்களூம் இந்த வழிமுறையையே பின்பற்றியுள்ளனர்.
இறைவனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து வழிபடுவது மற்றொரு முறை. நம்மாழ்வார் இப்படித்தான் பாடியிருக்கிறார். செவிலி அன்னை, தன் மகளின் நிலை கண்டு வருந்துவதாக வரும் திருவாய்மொழி பாடலில், `மண்ணைத் துழாவி இது வாமனன் அளந்த மண் என்றும், வானத்தை நோக்கி வணங்கி அதுதான் அவன் இருக்கும் வைகுண்டம் என்றும், கடலின் வண்ணத்தைக் கண்டு, கண்ணீர் பொங்கிய கண்களுடன் இது அவன் நிறம் என்றும் என் மகள் ஏங்குகிறாள். இவளை இந்நிலைக்கு ஆக்கிய பெருமானை என்ன செய்வேன்’ என்று, செவிலித்தாய் புலம்புவதாக காதல் நயத்துடன் சித்தரித்திருக்கிறார்.
இதுபோலவே, ஆண்டாளும் இறைவனைத் தன் மணாளனாக எண்ணி, அவனுக்கும், தனக்கும் கடிமணம் நடைபெறுவதாகவும், தேவர்குழாமெல்லாம் சூழ்ந்திருக்க, மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன்னை கைத்தலம் பற்றுவான் என்றும் பாடியிருக்கிறார்.
தாய் – சேய் மனோநிலை
இப்படி பல்வேறு மனோநிலைகளில், இறைவனோடு தாங்கள் ஒன்றி, பிறிதொன்றில்லாத நிலையை அடையவே அடியார்கள் எண்ணினர். இத்தகைய மனோபாவங்களில் தாங்கள் தாயாகவும், இறைவனை சேயாகவும் எண்ணி பக்தியை வெளிப்படுத்தியவர் பெரியாழ்வார். தன்னை யசோதை பிராட்டியாகவே எண்ணி, கண்ணபிரானின் குழந்தைத்தனத்தையெல்லாம் பாசுரங்களாக படித்துள்ளார்.
பெரியாழ்வார் திருமொழி என்ற பாசுரத் தொகுப்பு, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் அடங்குகிறது. இதில், நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடுதல் என, அவரது பல்வேறு பாசுரங்கள் தாயின் மனோநிலையில் பாடப்பட்டவை.
பிற மனோ நிலைகளில் பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே இறைவனிடம் எதையாவது ஒன்றைக் கோருவதாகவே இருக்கும். குறிப்பாக, மறுபிறவி இல்லாத பெருநிலை வேண்டும் என்பதே முக்கிய விண்ணப்பமாக இருக்கும்.
ஆனால், தாயின் மனோ நிலையில் பாடப்பட்டவை மட்டுமே, எவ்வித கோரிக்கையோ, சுயவிருப்பமோ, வேண்டுதலோ இல்லாமல், இறைவனின் மீது அக்கறை கொண்டதாக, அவனுக்கு எந்தத் தீங்கும் வந்திடக் கூடாது என்றும், கண்ணேறு பட்டுவிடக் கூடாது என்பதாகவும், இறைவனின் நலத்தை மட்டுமே நாடுவதாக அமைந்திருக்கும்.
பெரியாழ்வாரிடம் அமைந்த தாயின் மனோநிலையே ஆழ்வார்களில், அவரை பெரிய ஆழ்வாராக்கியது.
காலத்தால் மூத்தவர்கள் முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர்தாம். நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முதல் பாடலாக பாடப்பட்டது, அல்லது முதலாவதாக உருவானது என்றால், அது பொய்கையாழ்வார் திருக்கோவலூரில் பாடிய `வையம் தகளியா, வார்கடலே நெய்யாக’ எனத்தொடங்கும் பாடல்தான்.
ஆனால், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடலுடன்தான் நாலாயிர திவ்யபிரபந்தம் தொடங்குகிறது. இறைவனின் திருமேனிக்கு எவ்வித பங்கமும் நிகழ்ந்திடக்கூடாதே என்ற தாயின் பரிவுடன் பாடப்பட்டதோடு, தனக்காக எவ்விதக் கோரிக்கையும் இல்லாதது என்பதாலேயே, நாலாயிர திவ்யபிரபந்தத்தில் முதலிடம் பெற்றது திருப்பல்லாண்டு பாசுரம்.
பெரியாழ்வார் போற்றி -5