பழநி மாநாடு: முருக பக்தர்களுக்கு விதவிதமான உணவுகள் - ‘மெனு’ விவரம்

By KU BUREAU

பழநி: அனைத்துலக முருகன் மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு விதவிதமான உணவுகள் வழங்கப்பட உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் விஐபி.க்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக மூன்று வகை உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டினருக்கு காலை உணவாக சாஹி துக்கடா, இளநீர் இட்லி, நெய் பொடி ரோஸ்ட், மேதி பூரி, கோதுமை உப்புமா, கவுனி அரிசி அல்வா, ராப்டி மால்பூவா, காஞ்சிபுரம் இட்லி, ராஜஸ்தானி கிச்சடி, பில்டர் காபி, டீ வழங்கப்பட உள்ளது.

அதே போல, இரவு உணவாக பனங்கருப்பட்டி பருத்தி பால், அல்வா, ரெட் சட்னி மசால் தோசை, கடாய் பன்னீர் கேப்சிகம் டிக்கா, ஹைதராபாத் வெஜ் தம் புலாவ், கிரீமி ஃப்ரூட் தயிர் சாதம், ஸ்வீட் பீடா, ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்ல மைசூர்பா, மைசூர் மசால் தோசை, குழாப்புட்டு வழங்கப்பட உள்ளது.

விஐபி.களுக்கு காலை உணவாக இளநீர் இட்லி, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல், கறிவேப்பிலை குழம்பு, கார்லிக் நெய் பொடி ரோஸ்ட், குஜராத்தி கடி, இடியாப்பம், இரவு உணவாக ஷெல் இட்லி, பூண்டு தேங்காய் பால் குழம்பு, ஆனியன் கார்லிக் குல்சா, ஹைதராபாத் வெஜ் தம் புலாவ், வெஜிடபிள் பிரியாணி, மசாலா மிர்ச்சி ரொட்டி, ஆப்பம், சாமை அரிசி தயிர் சாதம், மேங்கோ அச்சார் வழங்கப்பட உள்ளது.

மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள உணவு கூடம்.

பக்தர்களுக்கு மதிய உணவாக பூசணி அல்வா, சாதம், சாம்பார், கோதுமை பாயாசம், சுண்டல் வத்தல்குழம்பு, சேனை சாப்ஸ், அவுல் பாயாசம், பருப்பு வடை, இஞ்சி, புளி ஊறுகாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2 பிரத்யேக சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் பணியில் 400-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க நுழைவு கட்டணம் கிடையாது: பழநியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்பதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என இந்துசமய அற நிலையத் துறை செயலர் சந்திரமோகன் கூறினார். பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது சந்திரமோகன் தெரிவித்ததாவது: ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அதனால், அரசு சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்க பக்தர்கள், பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

அனைவருக்கும் அனுமதி இலவசம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, மாநாட்டு திடல் மற்றும் அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE