ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோயில் அருகே நந்தவனம் அமைத்து தொடர்ந்து புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் சுவாமி பெரியாழ்வார். மதுரை அரசசபையில் பரிசாகக் கிடைத்த ஆயிரம் பொற்காசுகளை, வடபத்ரசாயி பெருமாள் கோயிலின் கைங்கர்யத்துகே செலவிட்டார்.
சுவாமி பெரியாழ்வார் பூக்களைப் பறிப்பதற்காக ஒருநாள் அதிகாலையில் நந்தவனத்துக்கு சென்றார். அங்கிருந்த துளசிக்கூட்டத்தின் நடுவேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, அழகிய பெண் குழந்தை கிடந்தது. அக்குழந்தைக்கு கோதை என பெயரிட்டு தாமே வளர்த்து வந்தார். அவள்தான் சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் நாச்சியார்.
சிறுவயது முதலே தனது மகளுக்கு வேதங்கள், புராணங்கள் மட்டுமின்றி, மாலைகட்டும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார். பெரியாழ்வாரைப் போலவே சிறுமியாகிய கோதை கட்டும் மாலையும் வடபத்ரசாயி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.
தான் கட்டிய மாலை நன்றாக இருக்கிறதா என்பதை அறிய, அதனை முதலில் தன் கழுத்தில் சூடிக்கொண்டு அழகுபார்ப்பாள். அதன்பிறகே பெருமாளுக்கு கொடுத்தனுப்புவாள்.
இதனை அறியாத பெரியாழ்வார் ஒருமுறை மாலையை சன்னதிக்கு எடுத்துச் சென்றார். அந்த மாலையில் தலைமுடி ஒன்று இருப்பதை பட்டர் காண்பிக்க பதறினார் ஆழ்வார்.
மீண்டும் வீட்டுக்கு வந்தார். மகளிடம் விவரம் கூறினார். தான் கழுத்தில் சூடியதால் தனது முடி தான் அதில் இருந்தது என்று மகள் கூறினாள். வருத்தமும், கோபமுமாக மகளைக் கடிந்து கொண்டார்.
மீண்டும் நந்தவனத்துக்குச் சென்று புதிதாக மலர்களை எடுத்து வந்து, மாலை சூடி சன்னதிக்கு எடுத்துச் சென்றார். ஆனால் அந்தப் புதிய மாலையை பெருமாள் ஏற்கவில்லை. கோதை தனது கழுத்தில் சூடிய மாலையே தமக்கு உகப்பானது என்று பெருமாள் உத்தரவிட்டார்.
அதன்பிறகு கோதை சூடிக்கொடுத்த மாலையே வடபத்ர சாயிக்கு தினமும் சமர்ப்பிக்கப்பட்டது.
மகளுக்கு மணம் முடிக்க வரண் தேடத் தொடங்கினார் ஆழ்வார்.
ஆனால், கோதையோ, ‘மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று மறுத்தாள். அதாவது ‘மனிதனாகப் பிறந்தவனை மணாளனாக எனக்குப் பேசினாள் உயிர் வாழ மாட்டேன்’ என்று தந்தையிடம் உறுதியாகச் சொன்னாள்.
‘அப்படியானால் யாரை மணம்புரிய விரும்புகிறாய்?’ என்று தந்தை கேட்டார்.
‘பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன்’ என்றாள் கோதை. அதாவது ஸ்ரீ மந் நாராயணனே தனக்கு மணாளனாக வேண்டும் என்றாள்.
இது சாத்தியமாகுமா? என்று கவலைகொண்டார் பெரியாழ்வார்.
கோதை நாச்சியார் கேட்டுக் கொண்டபடி 108 திவ்யதேசங்களிலும் வீற்றிருக்கும் திருமாலின் உருவங்களை எல்லாம் பெரியாழ்வார் அப்படி அப்படியே வர்ணித்தார். இவை அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அவள், ‘ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரையே மணம் முடிக்கப் போகிறேன்’ என்றாள்.
அந்த நாளும் வந்தது. பெரியாழ்வார் சகல மரியாதைகளோடு ஸ்ரீ ரங்கத்துக்கு தனது மகளை அழைத்துச் சென்றார். அங்கு அத்தனை பேரும் பார்த்திருக்க ஆதிசேஷன் மீது கால்வைத்து ஏறி, ரங்கநாதருடன் ஜோதியாகக் கலந்தாள் ஆண்டாள்.
பெருமாளையே தனது மகள் கணவனாக அடைந்தாலும், அவளைப் பிரிந்த சோகத்தால் தந்தை தவித்தார்.
“ஒரு மகள் தன்னையுடையேன்
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள்போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டுபோனான்”
- என்று சுவாமி பெரியாழ்வார் உருகினார்.
ஆண்டாள் நாச்சியாரும் தான் பாடிய திருப்பாவை, வாரணமாயிரம் ஆகிய இரு பாசுரத் தொகுப்பிலும், ‘பட்டர்பிரான் கோதை’ (பெரியாழ்வார் மகள் கோதை) என்றுதான் தன்னை அறிமுகம் செய்திருக்கிறார்.
பெரியாழ்வார் போற்றி -4