திருக்காஞ்சியில் ரூ.30 கோடி செலவில் 108 அடி உயர சதாசிவ மூர்த்தி சிலை!

By KU BUREAU

புதுச்சேரி: புதுச்சேரியின் திருக்காஞ்சி கிராமத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் 108 அடி உயரத்தில் சதாசிவ மூர்த்திசிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பார்வையிட்டார்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள திருக்காஞ்சி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த காசிக்கு வீசம் பெற்ற ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள கங்கை வராக நதீஸ்வரரை அகத்தியர் முனிவர் வழிபட்டதாக இக்கோயிலின் தலபுராணம் கூறுகிறது.

இக்கோயிலில் கங்கா ஆரத்தி விழா ஆண்டு தோறும் நடக்கிறது. முன்னொரு காலத்தில், இங்கு குளக்கரையில் பிரமாண்ட சதாசிவ மூர்த்தியாக இருந்த சிவன் சிலையை அகத்தியர் வழிபட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தற்போது இங்கு 108 அடி உயரத்தில் சதாசிவ மூர்த்தி சிலையை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.30 கோடி செலவில் நவக்கிரகங்கள் மற் றும் 27 நட்சத்திரங்களுக்கான வழிபாட்டுச் சிலைகளும் அவற்றை சுற்றி 108 லிங்கங்களும் வைக்கப்படுகின்றன. மூன்றாவது மாடியில் 108 அடி உயரத்தில் சதாசிவ மூர்த்திக்கு சிலை வைக்கப்படுகிறது.

இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்ட வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், “ இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் முழு கான்கிரீட்டால் செய்யப்பட உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் தயாராகும் இந்த வழிபாட்டு இடம், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நன்கொடையால் உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளில் இப்பணி நிறைவு பெறும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE