கழுகுமலை கோயிலில் வைகாசி விசாக திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் வைகாசி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தென்பழனி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வந்து வசந்த மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர்.

விழாவில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு சுற்று வட்டார பகுதி கிராம மக்களும், பக்தர்களும் கழுகாசலமூர்த்தி கோயிலிலிருந்து தொடங்கி கிரிவலப் பாதை முழுவதும் கும்பிடு சேவை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தேனி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும், கழுகுமலை அருகே அய்யாபுரம் சம்பா குளம் கரடிகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் காலை 11:30 மணிக்கு மேல் பால்குடம், காவடி மற்றும் அழகு குத்தியும் கிரிவலமாக கோயிலை வந்தடைந்து நேர்ச்சை செலுத்தினர்.

மதியம் 12 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்திக்கு பால் அபிஷேகமும் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியே தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE