அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க. அமாவாசையன்று இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் தரித்திர நிலையில் இருந்து அதிர்ஷ்ட நிலைக்கு நம் வாழ்க்கையை உயர்த்தி அருளுவார் தத்தாத்ரேயர்.
மூன்று தெய்வங்களின் மொத்த உருவமாகத் திகழும் தத்தாத்ரேயரின் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வழிபட்டு வந்தால், நம் பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான மூன்று தெய்வங்களையும் மும்மூர்த்திகள் என்று போற்றி வணங்குகிறோம். இந்த மூவரின் அம்சமாகத் திகழ்பவர் ஸ்ரீதத்தாத்ரேயர்.
அமாவாசை தினங்கள் என்றில்லாமல், தினமும் கூட இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.
படைப்புத் தொழிலைச் செய்து அருளுகிறார் பிரம்மதேவன். காக்கின்ற பணியைச் செய்து அருளுகிறார் திருமால். அழித்தல் பணிகளை செய்கிறார் ஈசன். இந்த மூவரும் தங்களுடைய பணிகளைக் குறைவின்றி செய்து வருவதால்தான், பூவுலகம் சமநிலையில் இருக்கிறது என விவரிக்கிறது சாஸ்திரம்.
இந்த மும்மூர்த்திகளின் அம்சமாகத் தோன்றியவர்தான் ஸ்ரீதத்தாத்ரேயர். குரு பிரம்மா என்கிறோம். குரு விஷ்ணு என்கிறோம். குரு மகேஸ்வரா என்று சிவனை வணங்குகிறோம்.
’குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாட்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’ என்கிறோம். ஆகவே, சிவமாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் திகழும் தத்தாத்ரேயரை குருவாக வணங்கச் சொல்கிறது புராணம்.
ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தந்நோ தத்தஹ ப்ரசோதயாத் என்பது ஸ்ரீதத்தாத்ரேயரின் காயத்ரி மந்திரம்.
இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் பிரம்மமுகூர்த்த வேளையில் சொல்வது மும்மடங்குப் பலன்களைத் தரும். இந்த மந்திரத்தை தினமும் சொல்லிக் கொண்டே தத்தாத்ரேயரை வணங்கி வழிபட்டு வந்தால், மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். காரியத்தில் வெற்றி காணச் செய்வார் தத்தாத்ரேயர். குருவாரம் என்று சொல்லப்படுகிற வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
குருவுக்கு உகந்தது மஞ்சள் நிற வஸ்திரமும் மஞ்சள் நிறப் பூக்களும். எனவே, குரு தத்தாத்ரேயருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தியோ மஞ்சள் நிறப் பூக்கள் சமர்ப்பித்தோ வணங்கி வழிபடலாம். வீட்டில் தத்தாத்ரேயரின் படத்தை பூஜையறையில் வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு கல்விச் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. அதேபோல, தீராத நோயையெல்லாம் தீர்த்தருளுவார் தத்தாத்ரேயர்.
ரீதத்தாத்ரேயரை மனதார நினைத்துக் கொண்டு, சிவன் கோயிலுக்குச் சென்று குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரில் அமர்ந்தும் வணங்கலாம். அதேபோல, பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் சந்நிதிக்குச் சென்றும் வழிபடலாம். திருப்பட்டூர் முதலான கோயில்களில் குடிகொண்டிருக்கும் பிரம்மாவின் சந்நிதிக்குச் சென்று, தத்தாத்ரேயரை நினைத்து அவருடைய காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபித்தோ, 108 முறை ஜபித்தோ வேண்டிக் கொள்ளலாம்.
நமக்கு அதிர்ஷ்டத்தைத் தந்து, நம் தரித்திர நிலையைப் போக்கி, பித்ரு சம்பந்தப்பட்ட தோஷங்களையும் பாவங்களையும் போக்குவார் தத்தாத்ரேயர்.