திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

By KU BUREAU

தூத்துக்குடி: திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திராளன பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயிலான இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 5:15 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. 5.35 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை பவனி வந்த தேர் காலை 6.32 மணிக்கு நிலையம் சேர்ந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், கண் காணிப்பாளர் அஜித் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரில் பவனி வந்த வெயிலுகந்தம்மன்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி கோயில் நாழிக்கிணறு மண்டகப்படி சேர்ந்தார். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு அம்மன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். சண்முகருக்கு எதிர்சேவை, தீபாராதனை நடை பெற்றது. தொடர்ந்து ஒளிவழிபாடு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தார். அப்போது பக்தர்கள் பட்டு, தேங்காய் பழம் வைத்து திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE