மணநாளில் சிவஜோதியில் கலந்த தம்பதியர்!

By மு.இசக்கியப்பன்

திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்தபோதே ஞானம் பெற்றவர். தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தேடித்தேடி, அந்தந்த பெருமானைப் பாடுவதையே பணியாகக் கொண்டவர். சம்பந்தர் தமது 16-வது வயதில் சீர்காழிக்கு வந்திருந்தபோது, தனது தந்தை சிவபாதரைக் கண்டார். மகனுக்குத் திருமணம் செய்துவைக்க தந்தை விரும்பினார். தந்தையின் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதித்தார்.

திருஞானசம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகை திருமணத்தை காட்டும் சிற்பம்

ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணம் என்னும் தலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரின் மகள் தோத்திர பூர்ணாம்பிகை. சிறுவயது முதலே சிவபெருமான் மீது அபார பக்தி கொண்டவர். இவரையே திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் முடிவெடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருவெண்ணீற்று உமையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்தான் திருஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

திருமண விழாவில் பங்கேற்க வந்த புது மாப்பிள்ளையாகிய திருஞானசம்பந்தருடன், நாயன்மார்களான திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் ஆகிய மூவரும் வந்திருந்தனர். இவர்களைக் கண்டு ஆச்சாள்புரம் கிராமம் ஆனந்தத்தில் மூழ்கியது.

பெரியோர்கள் வாழ்த்த, திருஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் திருமணம் இனிதே நிறைவுற்றது. திருமாங்கல்யம் பூட்டியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றைப் பாடினார். அதுதான் அவர் பாடிய கடைசி பதிகமாகும்.

அன்றைக்கு வைகாசி மாதம் மூலம் நட்சத்திர நன்னாள். சம்பந்தரின் பதிகத்தைக் கேட்டு, இறைவன் ஜோதி ரூபமாய் பிரசன்னமானார். திருஞானசம்பந்தர் தன்னோடு நின்ற அத்தனை அடியார்களையும் சிவஜோதியில் கலக்க அழைத்தார். முதலாவதாக தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் திருஞானசம்பந்தர் பற்றிக்கொண்டு 'நமசிவாய வாழ்க' என்றபடியே ஜோதியில் இருவரும் கலந்தனர். அடுத்து திருமண விழாவிற்கு வந்திருந்த நாயன்மார் மூவரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின்னர் அடியார்கள் எல்லாம் கலந்தனர்.

திருஞானசம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகை திருக்கல்யாண வைபவம்

இவ்விழா ஆண்டுதோறும் ஆச்சாள்புரம் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் வைகாசி மூலம் நட்சத்திர நாளில் நடைபெறுகிறது. முதல்நாள் காலையில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம், தீருவீதி வலம் வருதல், இரவில் சீர்வரிசை புறப்பாடு, மாப்பிள்ளை அழைப்பு ஆகியவை நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பின்னர், திருஞானசம்பந்தரும், தோத்திர பூர்ணாம்பிகையும் வெள்ளிப் பல்லக்கில் வீதி வலம் வருவார்கள்.

மறுநாள் அதிகாலையில் வைகாசி மூல நட்சத்திரத்தன்று பேரின்ப பேரொளிக்கு திருப்பதிகம் ஓதுதல் நிகழ்ச்சியும், சிவஜோதி தரிசனமும் நடைபெறும். இதைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர்பெருமணம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE