சிவனருள் பெற்ற அடியார்கள் – 12

By கே.சுந்தரராமன்

மங்கலவூரில் இடையர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார். இவர், சிவபெருமானையன்றி வேறு ஒன்றையும் விரும்பாதவர். குழலூதி ஐந்தெழுத்தைத் தொடுத்து இசையமுது வழங்கியவர்.

ஆனாய நாயனார்

சோழ வள நாட்டின் உட்பிரிவான மழ நாட்டில் அமைந்துள்ள ஊர் மங்கலவூர். அந்தக் காலத்தில் நிறைய சோலைகள் நிறைந்திருந்த இவ்வூர், பசுமையான வயல்கள், நிறைய நீர்நிலைகள் என்று செழிப்புடன் விளங்கியது. மந்தியும் அறியாத காந்தமலர்ச் சோலைகளில் சந்திரன் தவழ்வான். நெல்வரிகள் பரப்பிய பண்ணையின் வரம்பின்மீது வண்டினம் தவழும். வைக்கோல் போர்களின் மீது மேகம் தவழும்.

இவ்வூரில் உள்ள கோயிலில் பரசுதாமீசுரம் உடையார், திருமழுவுடைய நாயனார், சாமவேதிசுவரர் ஆகிய திருநாமங்களுடன் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தெய்வ வளமிக்க இவ்வூரில் பெருங்குடிகளுள் ஆயர்குடி நன்றாகவும் ஒன்றாகவும் இருந்தது. இக்குலத்தின் பொன்விளக்கு என்று போற்றப்படும் வகையில் ஆயனார் என்ற சிவனடியார் வசித்து வந்தார்.

கற்பகாம்பாள் கோயில்

ஆயர் குலம் விளங்க தோன்றிய இவர் நிறைய ஆனிரைகளை பெற்றிருந்ததால், ஆனாயர் என்று அழைக்கப்பட்டார். கன்றுகள், பால் கறவை மாறிய பசுக்கள், பால் கறக்கும் பசுக்கள், சினைப் பசுக்கள், இளங் கன்றுடைய புனிற்றுப் பசுக்கள், வலிய எருதுகள் ஆகியவற்றை தனித்தனி தொழுவங்களில் வைத்திருந்தார் ஆனாயர்.

எப்போதும் சிவபெருமானை நினைத்து மகிழ்வோடு இருப்பார். குழல் வாசிப்பதில் தேர்ந்த இவர், ஆனிரைகளை காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் மீண்டும் அவற்றை அழைத்து வரும்போதும், குழல் வாசித்துக் கொண்டே இருப்பார். சிவபெருமானின் திருவைந்தெழுத்தை (பஞ்சாக்கர மந்திரம் – ஓம்நமசிவாய) குழலில் இவர் இசைக்கும்போது, ஆனிரைகள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் மெய்மறந்து நிற்கும்.

ஒருநாள் காலை நாயனார் வழக்கம்போல் ஆனிரைகளை மேய்க்கப் புறப்பட்டார். நறுமலர் மாலையை அணிந்து கொண்டார். தலையை ஒரு புறமாகக் கோதி முடிந்து அதில் கண்ணி மாலையை சூடிக் கொண்டார். செங்காந்தள் மலரை காதில் சூடிக் கொண்டார். மரவுரியும் தழையுடையும் கட்டி, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு காலில் தோற்பாதுகைகளையும் தரித்துக் கொண்டார். கையில் வெண்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டு, ஆனிரைகளை ஓட்டிக் கொண்டு முல்லை நிலத்துக்கு புறப்பட்டார். அவருடன் ஏவலர்கள் மற்றும் சிறுவர்களும் புறப்பட்டனர்.

கார் காலம் என்பதால், முல்லை நிலம் பூத்துக் குலுங்கியது. ஆங்காங்கே கொன்றை மரங்கள், பூத்துக் குலுங்கி, புது மலர்ச்சோலை போன்று காட்சியளித்தது. இயற்கை எழில், மலர்களின் நறுமணம், வண்ண வண்ண மலர்கள் என்று தன்னையே மறந்து உள்ளத்தைப் பறிகொடுத்து, குழல் வாசித்தபடியே இருந்தார் ஆனாய நாயனார்.

எந்நேரமும் சிவபெருமானையே நினைத்துக் கொண்டிருந்த ஆனாயருக்கு, மரங்களில் மலர்களைப் பார்த்ததும் கொன்றை மலர்களை அணிந்தபடி சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. சிவபெருமானை பார்த்துவிட்டதைப் போன்று பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்திப் பெருக்கில் நனைந்தார். அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்தார். திருவைந்தெழுத்தை இசையுடன் பண் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசித்தார்.

அப்போது கானகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் தன் பாடல்கள் மூலம் தெரிவிக்கிறார்.

கல்லும் கரையும் அந்த இசை வெள்ளத்தில் அருகம் புல்லை அசைபோட மறந்தபடி ஆனிரைகள், ஆனாயரை சூழ்ந்து கொண்டன. கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து ஆனாயரிடம் வந்தன. மான் கூட்டங்களும் துள்ளி ஓடி வந்து ஆனாயரை சூழ்ந்து கொண்டன. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த ஆயர்கள், தங்கள் வேலைகளை மறந்து அதே இடத்தில் மெய்மறந்து நின்றபடி இசையில் லயித்தனர். தோகை விரித்தாடும் மயில் மீது படமெடுத்து ஆடும் பாம்புகள் மயங்கி விழுந்தன. சிங்கமும் யானையும் தங்கள் பகைமையை மறந்து ஒன்றோடொன்று இணைந்தவாறு இசை வசப்பட்டு நின்றன. புலிகளின் முன்பு புள்ளி மான்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன.

காற்று கூட வேகமாக வீசவில்லை. மரக்கிளைகள் அசைவற்று இருந்தன. மலைகளில் இருந்து பாய்ந்தோடும் தேனருவிகள் எவ்வித ஓசையும் இன்றி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தன. அலைமோதும் கடல் அலைகளின்றி அமைதியுடன் காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் இடியும் மழையும் இன்றி அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தன. இப்படி, ஈரெழு உலகமும் ஆனாயரின் இசைக்கு மயங்கிக் கொண்டிருந்தன.

நாகலோகத்தில் இருந்து நாகர்கள் பில வழியே வந்து இன்புற்றனர். விஞ்சையர், கின்னரர், தேவர்கள், மலைகளில் வாழும் அரமகளிர், கற்பகத் தருவின் கீழ் அமர்ந்து கிளிகளுக்கு அமுதூட்டிக் கொண்டிருந்த அமர் மாதர்கள் அனைவரும் தங்களை மறந்து ஆனாயரின் இன்னிசை மழையில் நனைந்தனர்.

திருமங்கலம் கோயில்

உயிருள்ள பொருட்கள் மட்டுமின்றி உயிரற்ற பொருட்களும் கூட ஆனாயரின் இசைக்கு கட்டுப்பட்டு இருந்தன. ஆனாயருடன் வந்த ஏவலரும், சிறுவர்களும் அவரது இசைக்கு மயங்கினர்.

மண்ணில் இருந்து எழுந்த ஆனாயரின் இசை, விண்ணுலகுக்கும் கேட்டது. கயிலை மலையில் உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானுக்கு ஆனாயரின் இசை கேட்டது. வெள்ளி அம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் ஈசனும் இசைக்கு கட்டுப்பட்டவர்தான். அன்று இலங்கேஸ்வரனின் இசைக்கு மயங்கிய சிவபெருமான் இன்று ஆனாயரின் இசையில் மெய்யுருகினார். உடனே ஆனாயரை ஆட்கொள்ள எண்ணினார்.

ஆனாய நாயனார்

பார்வதி தேவியுடன் ஆனாயர் முன்னர் தோன்றிய சிவபெருமான், “வேய்க்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து அணைந்திருவாய்” என்று வாழ்த்தி அருளினார். ஆனாயர் இறைவன் அருகிலேயே அமர்ந்து வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார்.

‘அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 11

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE