மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா ஆக.30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு, ஆக.29-ல் இரவு வாஸ்து சாந்தி நடைபெறும். ஆக. 30-ல் காலை 9.55 முதல் 10.19-க்குள் கொடியேற்றம் நடைபெறும். ஆக. 30-ம் தேதி முதல் செப். 4 வரை காலை, மாலையில் சந்திரசேகர் உற்சவம் 2-ம் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும்.
செப். 5-ல் ஆவணி மூல உற்சவத்தின் முதல் நாள் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நடைபெறும். தினமும் காலை, மாலை வேளைகளில் ஆவணி மூல வீதிகளில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறும். செப். 6-ல் நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடல். செப்.7-ல் மாணிக்கம் விற்ற திருவிளையாடல்.
செப். 8-ல் தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல். செப். 9-ல் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல். செப்.10-ல் பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல், அன்றிரவு திருஞானசம்பந்தர் சைவ சமய தல வரலாறு திருவிளையாடல் நடைபெறும்.
செப். 11-ல் காலை வளையல் விற்ற திருவிளையாடல் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் முக்கிய விழாவான சுவாமிக்கு பட்டாபிஷேகம், செப்.12-ல் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், செப். 13-ல் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறும்.
» ‘கங்குவா’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா? ரஜினியின் ‘வேட்டையன்’ அக்.10-ல் வெளியாகிறது!
» 'பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகைக்கு வளைகாப்பு: நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!
செப்.14-ல் விறகு விற்ற திருவிளையாடல், செப். 15-ல் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் சட்டத்தேர், இரவு சப்தாவர்ணம் நடைபெறும். செப். 15-ல் தீர்த்தம் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அன்றிரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் விடைபெறுதலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலை மையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.