விநோத திருவிழாவில் அதிர்ச்சி... 2 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

By காமதேனு

ஆந்திர மாநிலத்தில் 23 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழாவில் 2 பேர் பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலை பகுதியில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமி அன்று திருக்கல்யாணம் நடைபெறும். இதனை அடுத்து, கோயிலை சுற்றியுள்ள 23 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கு வந்து வழிபாடுகள் நடத்திய பின்னர், தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிடுவது வழக்கம். நேற்று இரவு இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விநோத திருவிழா

இதனால் அந்த பகுதியில் அவசர சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தடியடி திருவிழாவை நிறுத்த பல ஆண்டுகளாக போலீஸார் முயற்சித்து வந்த போதும் அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. பழங்காலத்திலிருந்து இந்த விழா நடைபெற்று வருவதாகவும், இந்த விழாவை கட்டுப்படுத்த முடியாது எனவும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக பாதுகாப்பு கூடுதலாக அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போலீஸார் தடியடி திருவிழாவிற்காக, சிசிடிவி கேமராக்களை அதிகளவில் வைத்து கண்காணிப்பு மேற்கொள்வதோடு, இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து வருகின்றனர். இதனிடையே மரத்தின் மீது அமர்ந்து, சிலர் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது, மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE