ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

By காமதேனு

டெல்லியில் செங்கோட்டை பகுதியில் நடைபெறும் ராவண வதம் நிகழ்ச்சியில், முதல் பெண்மணியாக நடிகை கங்கனா ரனாவத் பங்கேற்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் லவகுசா ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் போது ராமர் வேடம் அணிந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட பொம்மைகளுக்கு நெருப்பு மூட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

லவகுசா ராம்லீலா நிகழ்ச்சி

இந்நிலையில் இதுவரை பெண்கள் பங்கேற்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. தற்போது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது. இதனை வரவேற்கும் வகையில் இந்த ஆண்டு பெண்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பெண்ணாக நடிகை கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள கங்கனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லவகுசா ராம்லீலா கமிட்டியின் தலைவர் அர்ஜுன் குமார், இந்த ஆண்டு ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரது உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு சக்திகளின் உருவ பொம்மைகளும் எரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE