பெரம்பூரில் நவராத்திரியை முன்னிட்டு நாட்டிய பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி பண்டிகையில், கொலு பொம்மைகளாக சிறுமிகள் மாறி காட்சியளித்த சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
பெரம்பூர் பாரதி சாலையில் சரஸ்வதி கலா கேந்திரா நாட்டிய பள்ளியில் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொம்மைகளுக்கு பதிலாக கடவுள்களின் வேடம் தரித்த சிறுமிகளை கொலுவில் நிறுத்தி வித்தியாசமான முறையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சரஸ்வதி, லட்சுமி, சக்தி துர்கை, மீனாட்சி, அபிராமி, அங்காள பரமேஸ்வரி, பவானி உள்ளிட்ட 18 கடவுளர்களின் வேடங்கள் அணிந்த சிறுமிகள், தத்ரூபமாக பொம்மைகள் போன்ற நின்று காட்சியளித்தனர்.
இதனை பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நேரில் வந்து கண்டு ரசித்தனர். நவராத்திரி தோன்றிய வரலாறை பறைசாற்றும் வகையிலும், இளைய தலைமுறைக்கு புதிய படைப்புகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் இது போன்ற வித்தியாசமான படைப்புகளை செய்து வருவதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
லைவ் கொலு கான்செப்ட் என்ற வகையில் சிறுமிகள் கடவுள்களின் வேடம் அணிந்து தத்ரூபமாக காட்சியளித்ததாகவும், இந்த வருடம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.