வள்ளலார் சர்வதேச மையம் அமையும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By KU BUREAU

சென்னை: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளார் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்

இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இப்போது உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டிடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழக அரசு 99 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

சர்வதேச மையம் கட்டிக்கொடுத்து சத்திய ஞான சபையை அரசு எடுத்துக் கொள்ளப் போவதாக மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மையம் கட்டப்பட்டு, மீண்டும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும். காலி நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அடிக்கல் நாட்டும் பணிகள் துவங்கிய போது, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை குழுவினர் அந்த நிலத்தை ஆய்வு செய்தது” என குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது? அதன் மூலம் பக்தர்களின் உரிமை எப்படிப் பாதிக்கப்படுகிறது? என மனுதாரர்கள் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “வள்ளலார் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காகப் பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். அதனால் வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டலாம் எனவும், 100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதைப் பாதுகாக்க வேண்டும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, “இதுவரை இந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்காத நிலையில் எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கையில், “கோயில் புராதன சின்னம் தான். கோவிலை அரசு தொடப் போவதில்லை. ஆனால் அந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு நியமித்த நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த குழு, இந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என அறிக்கை அளித்துள்ளது” என்றார்.

இதனையடுத்து, “தமிழகத்தில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து, நூறு ஆண்டுகள் பழமையானவை எனக் கண்டறிந்தால் அவற்றை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொல்லியல் துறை அமல்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கின் வாதங்கள் நிறைவு பெறாததால் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE