காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா!

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் நடந்த விண்ணேற்பு பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கும்பிடு சேவை செய்து நேர்ச்சை செலுத்தினர்.

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத்தில் கடந்த 6-ம் தேதி விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மறையுரை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு மறையுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றினர். 5-ம் திருநாளான 10-ம் தேதி மரியன்னை மாநாடும், 6-ம் திருநாளான 11-ம் தேதி காலை 8 மணிக்கு புது நன்மை விழா நடந்தது.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவில் அன்னையின் சொரூம் தாங்கிய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

9-ம் திருநாளான நேற்று மாலை 7 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. 10-ம் திருநாளான இன்று அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலியில் தென் தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

தேருக்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்ச்சை செலுத்தினர்.

தொடர்ந்து ஆரோக்கிய மாதா மற்றும் பரலோக மாதா சொரூபங்கள் தாங்கிய தேர் பவனி தொடங்கியது. தேருக்கு பின் ஏராளமான மக்கள் கும்பிடு சேவை செய்து நேர்ச்சை செலுத்தினர். மாலை 5 மணி வரை மக்கள் கும்பிடு சேவை செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிராத்தனை செய்தனர். தொடர்ந்து காலை முதல் மாலை வரை ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலிகளும், இரவு 7 மணிக்கு சேசு சபை அருட்தந்தையர்கள் சார்பில் திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE