கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் முகத்தில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் அச்ச உணர்வு உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் அயோத்திக்கு நேரில் வராமல் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று மக்களுடன் சாமி தரிசனம் செய்து பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
அதனை ஏற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தனது மனைவியுடன் சென்னை மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பிய அவர், அந்த கோயிலில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஊழியர்கள் முகத்தில் கண்ணுக்குத் தெரியாத பயம் மற்றும் அச்ச உணர்வு இருந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் "இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அந்தக் கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயிலின் தலைமை அர்ச்சகர் மோகன் பட்டாச்சார்யா கூறுகையில், "எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஆளுநர் வரும் நேரத்தில் தங்களை ஒரு செய்தியாளர் பேட்டி கேட்டார். ஆளுநர் வந்து சென்ற பிறகே பேட்டி அளிக்க முடியும் என்று கூறினோம். அதனைக் கருத்தில் கொண்டே நாங்கள் அச்சத்தில் இருப்பதாக ஆளுநர் அவ்வாறு கூறியிருக்கலாம், மத்தபடி எங்களுக்கு அச்சம் எதுவும் இல்லை, அச்சுறுத்தலும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
முற்பிறவியில் செய்த தவத்தின் பயன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ்நாட்டில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை!
ஜாமீனுக்குப் போராடும் செந்தில் பாலாஜி.... நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்!