கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை... வெளியானது முதல் புகைப்படம்!

By காமதேனு

அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ராமர் சிலை

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி முதல், இந்தியாவின் மிக முக்கிய பிரமுகர்கள் வரையிலும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த கோயிலில் கருவறையில் நிறுவப்படும் பால ராமர் சிலையை கர்நாடகாவின் மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார்.

கும்பாபிஷேகத்துக்கு முன்பாக அயோத்தி கோவில் வளாகத்தில் ராமர் பிரவேசம் செய்வதைக் குறிக்கும் நிகழ்வாக கடந்த 17-ம் தேதி பால ராமர் விக்ரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12. 45 மணியளவில் கருவறைக்குள் கொண்டு சென்று வைக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில்

அதனைத் தொடர்ந்து நான்கு மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கருவறையில் வைக்கப்பட்ட பாலராமரின் சிலை புகைப்படத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். முகம் மஞ்சள் துணியால் மூடப்பட்ட நிலையிலான முதல் புகைப்படம் சமூக வலைதளங்களின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. 22 ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலை தற்போதே காணக் கிடைத்துள்ளதால் ராம பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE