நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

By காமதேனு

நாளை அக்டோபர் 14ம் தேதி மகாளய பட்ச அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனை செய்ய மறந்துடாதீங்க. பித்ரு ஆராதனை என்று சொல்லப்படும் முன்னோர் ஆராதனையை மகாளயபட்ச அமாவாசை தினத்தில் செய்வது நமக்கும் நம் சந்ததியினருக்கும் வாழ்வில் அனைத்து வளங்களையும் வழங்கும்.

அமாவாசை தினங்களில் நாம் செய்கிற ஆராதனைகள் வழிபாடுகள் அனைத்துமே நமது முன்னோர்களைப் போய்ச் சேரும். இதில் மகிழ்ந்து அந்த ஆத்மாக்கள் நமக்கு அருளாசி வழங்குவார்கள்.

பித்ருக்களை வணங்குவதை, பித்ருக் கடன் என்றே விவரிக்கிறது இந்து மதம். கடன் என்றால் கடமை. நம்முடைய இந்த வாழ்க்கையில், நமக்கான மிக முக்கியமான கடமை என்பதே முன்னோர் வழிபாடு தான். வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு மலர் சூட்டி வழிபடலாம். தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடலாம். படையலிட்டு வணங்கலாம். படையல் உணவை முன்னோர்களுக்குப் படைத்துவிட்டு, காகத்துக்கு உணவு வைத்துவிட்டு வேண்டிக்கொள்ளலாம்.

அமாவாசைகளில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலானவை மிக மிக முக்கியமான அமாவாசைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாத அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்ய இயலாவிட்டாலும் வருடத்தின் இந்த மூன்று முக்கியமான அமாவாசை தினங்களிலாவது நீர்நிலைகளான கடலிலோ, நதியிலோ குளத்திலோ, நதிக்கரையிலோ நீராடி, தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வது மிகுந்த பலன்களைத் தரும்.

எள்ளும் தண்ணீரும் ‘அர்க்யமாக’க் கொண்டு முன்னோர்களின் பெயர்களை மூன்று முறை சொல்லி எள்ளை இறைத்து நீர் விடுவது, நம் சந்ததிக்குத்தான் பெரும் புண்ணியமாக வந்து சேரும். நாம் எந்த ஜென்மத்திலோ... தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE