சட்டநாதர் கோயிலில் கிடைத்த செப்பேடுகளை அரசு கையகப்படுத்துவதா? சீறிய சீர்காழி பக்தர்கள்

By காமதேனு

சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள் மற்றும் செப்பு பட்டயங்களை அரசு கையகப்படுத்துவதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே 24ம் தேதி நடைபெற்றது. இதற்காக யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ம் தேதி கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் மண் எடுப்பதற்காக குழி தோண்டியபோது, அங்கு பழமை வாய்ந்த 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவாரப் பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த புனிதமான இந்த பொருட்களை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கணிப்பு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராஜ கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

சீர்காழி சட்டநாதர் கோயிலில் கிடைத்த செப்பேடுகள்

கூட்டத்தில் தருமபுரம் ஆதீன பிரதிநிதிகளாக பொது மேலாளர் ரங்கராஜன், கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, மேலாளர் சேதுமாணிக்கம், சட்டநாதர் கோயில் காசாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கூட்டத்தில் அதிமுக, பாஜக, சீர்காழி தமிழ்ச் சங்கம், திருக்கோயில் திருமணங்கள் பாதுகாப்பு பேரவை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது அவர்கள், தொன்மையான சீர்காழி கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலைகள் மற்றும் தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடுகளை, அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருத்து கேட்பு கூட்டம்

தெய்வ சிலைகள் மற்றும் செப்பேடுகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கோயில் வளாகத்திலேயே பெட்டகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கான செலவு தொகையினை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார் எனவும் தெரிவித்தனர்.

கருத்து கேட்பு கூட்டம்

இவை அனைத்தும் ஆலய வளாகத்திற்குள் கிடைத்த காரணத்தினால் ஆலயத்திற்கு உள்ளேயே பாதுகாப்பு பெட்டகம் வைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கும், சீர்காழி வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் கோயில் அருகிலேயே கண்டெடுக்கப்படும் சிலைகளை பல்வேறு இடங்களில் கோயிலுக்கே வழங்கியதன் ஆவணங்களை இந்து அமைப்புகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE