திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயில் திருவாதவூர் திருமறைநாதர் கோயில். இது மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலமாகும். இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 13 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வருகின்றனர்.

மே 17-ம் தேதி காலை சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மேலூர் சிவன் கோயிலில் எழுந்தருளினார். எட்டாம் நாளான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பிரியாவிடையுடன் திருமறைநாதர், வேதநாயகி அம்மன் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க 10.15 மணியளவில் திருக்கல்யாணம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து 9-ம் நாளான இன்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7.45 மணியளவில் பெரிய தேரில் பிரியாவிடையுடன் திருமறைநாதர், சிறிய தேரில் வேதநாயகி அம்மன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனை முடிந்து காலை 8.45 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் திருமறைநாதர் பிரியாவிடையுடன், வேதநாயகி அம்மன் எழுந்தருளினர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து காலை 10.10 மணிக்கு நிலையை அடைந்தது. இவ்விழாவில் மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ திருவிழாவின் பத்தாம் நாளான நாளை காலையில் தீர்த்த பூஜை நடைபெறும் இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE