ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இது தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருந்திருவிழாவில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வைகாசி பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி இரவு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்மம், யானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 7ம் நாள் விழாவில் மே 19ம் தேதி அம்மையப்பர், தவம் பெற்ற நாயகி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அதன்பின் நச்சாடை தவித்தருளிய சுவாமி பிரியாவிடை உடன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரிலும், அன்னை தவம் பெற்ற நாயகி சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரிலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலர் துரைரத்தின குமார், எம்பி-யான தனுஷ்குமார், எம்எல்ஏ-வான தங்கப்பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ், நகராட்சி தலைவர் பவித்ரா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.