திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழு லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றது. அதன்படி 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் ஏழு லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.