கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் நாக சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி, ராகு பகவான், நாக கன்னி. கேது பகவான் ஆகிய 3 சுவாமிகளுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி மற்றும் ஐப்பசி மாதங்களில் வரும் அமாவாசை முடிந்து 4வது நாளான வளா்பிறையில வருவது நாக சதுர்த்தியாகும். ஆண்டுதோறும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இந்த நாக சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு, நாக சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு இன்று, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் தெற்கு மூலையில் பாம்புப் புற்றின் மேல் எழுந்தருளியுள்ள ராகு பகவான், நாக கன்னி, கேது பகவான் சன்னதியில் 108 லிட்டா் பாலை கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, சா்ப சாந்தி ஹோமம், தோஷ நிவா்த்தி ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் தங்களது குடும்ப கஷ்டங்கள் தீர்க்கவும், கணவன், குழந்தைகள், உறவினர்கள் நலமுடன் வாழ வேண்டியும், தீர்க்க ஆயுளுடன் வாழவும் நாககன்னி அருகில் உள்ள வன்னி மரத்தடியில் உள்ள நாகத்திற்கு மஞ்சள் நூல் கட்டி வழிபட்டனர். மாலையில் ராகு பகவான், நாக கன்னி, கேது பகவானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE