மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயில் உள்ளது. நாட்டின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோயிலில் ‘மகாகாள் மகாலோக் காரிடார்’ என்ற பெயரில் நடைபாதை, தாழ்வாரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரூ.850 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த வழித்தடத்தின் முதல்கட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து ரூ.242.35 கோடி கட்டப்பட்ட 2-வது கட்ட வழித்தடத்தை மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் உஜ்ஜைனி மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்து விடுகிறது. அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சுரங்கப்பாதை கட்டப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 8 லட்சம் பக்தர்கள் வரை கோயிலுக்கு வந்துசெல்ல முடியும்” என்றார்.