ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ‘கோவிந்தா கோபாலா’ கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளில் 16 வண்டி சப்பரமும், 5-ம் நாள்காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை நிகழ்ச்சியும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள்இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவைஉற்சவம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
நேற்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின்சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ராசிபலன் @ ஆகஸ்ட் 8, 2024
» வளமான, புதிய வங்கதேசத்தை நாம் உருவாக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் கலீதா ஜியா பேச்சு
ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் மற்றும் அழகர் கோயிலில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9:05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மான்ராஜ் எம்.எல்.ஏ., நகராட்சித்தலைவர் ரவிக்கண்ணன் ஆகியோர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தலா 350 அடி நீளம் உள்ள 7 வடங்களை பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்தனர். தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்றது. பிற்பகல் 12:20 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரில் சிக்கிய மின் வயர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தெற்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் 1.8 கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் கம்பிகள், ரூ.1.82 கோடி மதிப்பில் புதைவட கம்பி முறையில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மின் விநியோகத்தை கடந்த26-ம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுசாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால் வீடுகளுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்காததால், உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றப்படவில்லை. இதனால் நேற்று காலை ரத வீதிகளில் காலை 7 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேல ரத வீதியில் தேர் சென்றபோது, தேரில் உயர் அழுத்த மின் கம்பி சிக்கியது. மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை அகற்றிய பின்பு தேர் புறப்பட்டுச் சென்றது. இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு வடக்கு ரத வீதியில் தேர் வந்தபோது மின் கம்பத்தில் மோதியதில் தேரின் மேற்பகுதி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.