ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூரம் வைபவம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூரம் வைபவம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 27ம் தேதி துவங்கியது. இதையடுத்து தினந்தோறும் பர்வதவர்த்தினி அம்பாள் வாகனங்களில் எழுந்தருளல், திருவிளக்கு பூஜை, வெள்ளி ரதத்தில் வீதி உலா, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் பத்தாவது நாளான இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பகல் 12 மணியளவில் மஞ்சள் நீராடல், தீர்த்தம் கொடுத்தல், கன்னிப்பெண் பூஜை, பூரம் தொழுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (வியாழக்கிழமை) ஆடி தபசுவை முன்னிட்டு அதிகாலை 2.00 மணியளவில் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படுகிறது.

ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பிறகு பர்வதவர்த்தினி அம்பாள் காலை 5.55 மணிக்கு மேல் கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும். மாலையில் நடை திறந்தவுடன் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE