திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்

By KU BUREAU

மதுரை: மதுரை திருவாதவூர் திருமறை நாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயில் திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில். மாணிக்கவாசகர் அவதரித்த தலம். இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 13- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் பிரியாவிடையுடன் திருமறைநாதர், வேதநாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மே 17-ம் தேதி காலை சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூர் சிவன் கோயிலில் எழுந்தருளினார். 8-ம் நாளான நேற்று திருக்கல்யாணத்தையொட்டி காலையில் சப்பரத்தில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் திருமறை நாதர், வேத நாயகி அம்மன் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க 10.15 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், மற்றும் அறங்காவலர்கள் சீனிவாசன், செல்லையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரவில் யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர்.

மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பங்கேற்றோர்.

அதனைத் தொடர்ந்து 9-ம் நாளான இன்று (மே 21) காலை 8 மணியளவில் தேரில் எழுந்தருள்கின்றனர். பின்னர் 9 மணியளவில் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான நாளை (மே 22) காலையில் தீர்த்த பூஜை மற்றும் அன்றிரவு 9 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE