மதுரை: இந்தியாவின் ஆன்மிக குருவாக திருவள்ளுவரை அறிவிக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'திருவள்ளுவர் எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களைக் கூறும் திருக்குறளை இயற்றியுள்ளார். கல்வி, ஒழுக்கம், அரசியல், இல்லறம் என அனைத்திற்குமான கருத்துக்கள் திருக்குறளில் உள்ளன. பிற மொழியை சேர்ந்தவர்களும் திருக்குறளை போற்றிப் புகழ்கின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, திருக்குறளை தேசிய அற நூலாக அறிவித்து, அதனை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து மத்திய - மாநில கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும். சங்க காலத்து தமிழ் நூல்களை தேசிய உடமையாக அறிவிக்கவும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மிக குருவாக அறிவிக்கவும், திருவள்ளுவர் பிறந்த நாளை இந்தியாவின் ஆன்மிக நாளாக அறிவித்து தேசிய விடுமுறை வழங்கவும் உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''தேசிய மலர், தேசிய விலங்கு, தேசியக்கொடி ஆகியன உள்ளன. அப்படியிருக்கும் போது, தேசிய அறநெறி நூல் என திருக்குறளை எப்படி அறிவிப்பது? இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்களை கொண்ட நாடு. இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில், அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இதுபோல கோரிக்கைகளை முன் வைத்தால் என்னவாகும்? இது போன்ற மனுக்களை நீதிமன்றம் ஊக்குவிக்காது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.